கடந்த ஆண்டில் இறுதியில் ஜெயிலர், லியோ படங்கள் ரிலீஸ் ஆகி பெரிய வெற்றிப் படங்களாக வசூலை குவித்தன. விமர்சன ரீதியாக ஜெயிலர் – தங்கப்பதக்கம் கதை என்றும், லியோ படம்- இடைவேளைக்கு பிறகு இரட்டை பிறவி, நரபலி என கடுமையாக விமர்சனங்களை சந்தித்த படம் என்றாலும், இரு படங்களும் பல நூறு கோடிகளை வசூலித்து குவித்து வெற்றி பெற்றன.
அதன்பிறகு 2024ம் ஆண்டு துவங்கிய பிறகு இப்போது வரை இரண்டரை மாதங்களில் மொத்தம் 52 படங்கள் தமிழில் வெளியாகி இருக்கின்றன. சிவகார்த்திகேயன் நடித்த அயலான், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், ரஜினி கேமியோ ரோலில் நடித்த லால் சலாம், விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் உட்பட மொத்தம் 52 படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன.
இதில் எந்த ஒரு படமுமே பெரிய அளவில் ஹிட் படமாக அமையவில்லை. அனைத்து படங்களுமே மிகப்பெரிய ஏமாற்றத்தை தான் ரசிகர்களுக்கு தந்திருக்கின்றன. குறிப்பாக 6 ஆண்டுகளுக்கு பின் வெளியான அயலான் படம், ஏலியன், ஏஆர் ரகுமான் இசை, ரவிக்குமார் டைரக்ஷன் என எதிர்பார்த்த படம் ஊத்திக்கொண்டது.
அதே போல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. லைகா புரடக்சன் தயாரிப்பு, ஏஆர் ரகுமான் இசை, ரஜினி நடிப்பு என பெரிய எதிர்பார்ப்பு இருந்த இந்த படமும் பிளாப் ஆகி விட்டது. ஆக ரஜினி படமும் தேறவில்லை. சிவகார்த்திகேயன் படமும் தேறவில்லை.
அதன்பிறகு வெளிவந்த படங்கள் எல்லாமே பெரிய ஸ்டார் வேல்யூ நடிகர்கள் படங்கள் இல்லை. கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2, இந்தியன் 3, ரஜினி நடிப்பில் வேட்டையன், சூர்யா நடிப்பில் கங்குவா, விஜய் நடிப்பில் கோட், அஜீத்குமார் நடிப்பில் விடாமுயற்சி, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 என பல முக்கிய நடிகர்களின் படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றன.
இரண்டரை மாதங்களாக எந்த படங்களுமே தேறாத நிலையில் ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் நடித்துள்ள படங்கள் களத்தில் இறங்கினால் மட்டுமே, தமிழ் சினிமாவில் வசூலும், ரசிகர்களுக்கு உற்சாகமும் பிறக்கும். இந்த 52 படங்கள் தந்த ஏமாற்றத்தை, தோல்வியை, விரக்தியை வரக்கூடிய இந்த படங்கள் கண்டிப்பாக விரட்டும். பெரிய அளவில் ஹிட் படங்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் ஷங்கர், சிறுத்தை சிவா, வெங்கட்பிரபு, மகிழ்திருமேனி படங்கள் என்பதால் அது வேற லெவல் படங்களாக இருக்கும் என்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





