தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுப்பதில் கவனிக்கத்தக்கவர் இயக்குனர் சசி. சொல்லாமலே திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். எப்போதும் குணசித்திர கதாபாத்திரங்களிலேயே நடித்துக் கொண்டிருந்த லிவ்விங்ஸ்டைனை, அந்தத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக காட்டினார் சசி.
விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் பரவலாக பேசப்பட்டது. இதன்பிறகு பல குறிப்பிட்டத்தக்க வெற்றி திரைப்படங்களை சசி கொடுத்திருக்கிறார். இதில் ரோஜா கூட்டம் திரைப்படத்தை நாம் கூறலாம். வழக்கமான காதல் திரைப்படம் தான் என்றாலும், அதன் திரைக்கதையை சுவாரசியமாக அமைத்திருந்ததால் ரோஜா கூட்டம் திரைப்படம் வெற்றி பெற்றது.
இதே போல் காதல் திரைப்படமான பூவும் பலரது கவனத்தை ஈர்த்தது. வழக்கமாக ஆண்களின் பார்வையிலேயே காதல் திரைப்படத்தை இங்குள்ள இயக்குனர்கள் பலர் அள்ளிக் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் முதல்முறையாக, பெண்ணின் காதலை மையப்படுத்தி அவரின் வலியை அழகாக காட்சிப்படுத்தி நம்மை கவர்ந்திருந்தார் இயக்குனர் சசி.
மலையாள நடிகை பார்வதி, அந்தத் திரைப்படத்தில் மாரி எனும் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார். இதனைத் தொடர்ந்து சசிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது பிச்சைக்காரன். இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ட்ரெய்லரை பார்த்ததுமே, விஜய் ஆண்டனி ஒரு போலீசாக இருப்பார், பிச்சைக்காரன் கெட்டப்பில் வருவார் என்று பலரும் ஆருடம் தெரிவித்தார்கள்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் திரைக்கதையை மிக சுவாரசியமாக காட்டியிருந்தார் சசி. தாயின் உடல்நலம் சரியாவதற்காக, மகன் பிச்சைக்காரன் வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது போன்று அவர் காட்சி அமைத்திருந்தார். தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படமும் அவருக்கு வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, சசி புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதில் கதாநாயகனாக நடிக்கப் போவது வேறு யாரும் இல்லை சசிகுமார் தான். இதற்கான பிரீ ப்ரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கள்ளக்குறிச்சியில் இதற்கான படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





