தனுஷ் இந்திய சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருகிறார். தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ், அதனை தொடர்ந்து தனது 50 ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதன் பின் மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ள தனுஷ், ஹிந்தியில் “தேரே இஷ்க் மே” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு தனுஷ் இந்திய சினிமாவின் ஒரு முக்கிய நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் தனுஷை குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக ரசிகர்களிடையே பரிச்சயமான ரோபோ ஷங்கர், மிக பிரபலமான காமெடியனாக உருவான பிறகு, பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

“இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”, “வாயை மூடி பேசவும்”, “மாரி” போன்ற எக்கச்சக்க திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய ரோபோ ஷங்கர், ஒரு முக்கிய காமெடி நடிகராக வளர்ந்தார். சமீபத்தில் கூட “தி லெஜண்ட்”, “கோப்ரா”, “தமிழரசன்” ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ரோபோ ஷங்கரின் உடல் எடை பல மடங்கு குறைந்து போனது. அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்துபோனார்கள். ரோபோ ஷங்கர், மஞ்சள் காமாலை நோயால் தாக்கப்பட்டதால் அவரது உடல் மெலிந்துப்போனதாக தெரிய வந்தது. அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்தான் மஞ்சள் காமாலை வந்ததாகவும் பலர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ரோபோ ஷங்கர், “மாரி படத்தில் நடித்தபோது தனுஷிற்கு மதுப்பழக்கம் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் சுதாரித்துக்கொண்ட தனுஷ் மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டார். எனக்கு இருந்த அதே கெட்ட பழக்கம்தான் தனுஷிற்கும் இருந்தது” என கூறியுள்ளார். ரோபோ ஷங்கரின் இந்த பேட்டியால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
சமீபத்தில் கூட ராமநாதபுரத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்ட ரோபோ ஷங்கர், தான் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் அதனால் தான் மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளானதாகவும் தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும் மாணவர்களிடையே உரையாற்றினார். மேலும் பேசிய அவர், “மது அருந்துவதை தவிருங்கள்” எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





