தமிழ் சினிமா என்பது மக்களின் ரசனைக்கான பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. இரண்டரை மணி நேரம் தங்களது சொந்த வாழ்க்கை துயரங்களை மறந்து, கவலைகள் இல்லாமல் சிரித்து மகிழ, ரசித்து பொழுதை கழிக்க தமிழ் சினிமாக்கள், மக்களுக்கு பெரிய பங்காற்றி வந்தன. ஒரு படம் பார்த்தால், அதை மனதில் திரும்ப திரும்ப அசைபோடும் அளவுக்கு படங்கள் ரசனைக்குரியதாக இருந்தன.
தில்லானா மோகனம்பாள், திருவிளையாடல், நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன் துவங்கி, கரகாட்டக்காரன், சின்னதம்பி, புன்னகை மன்னன், வேலைக்காரன், மனிதன், காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக என தமிழ் சினிமா அதன் அடையாளம் பயணித்த காலமாக 1980, 90கள் இருந்தன. இதில் காதல், காமெடி, இசை, வழக்கமான வில்லன், சண்டை காட்சிகள் என்பது பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்தன.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், தமிழ் சினிமாவின் அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கி, இப்போது தமிழ் சினிமா நாளடைவில் இருக்குமா, என்பதே கேள்விக்குறியாகி விட்டது. இதற்கு ஆரம்பகால வித்திட்ட படங்களாக அமைந்தவை கேஜிஎப், பாகுபலி போன்ற படங்கள்தான்.
பான் இந்தியா படங்கள் என்ற பெயரில், படங்களை பிரமாண்டமாக தயாரித்தும், பல நூறு கோடி ரூபாய்களை முதலீடு செய்தும், பிறமொழி நடிகர்களை நடிக்க வைத்தும், ஹீரோக்களின் சம்பளம், 100 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் என உயர்த்தியும், தமிழ் சினிமா எங்கே என்று தேடும் நிலையை உருவாக்கி வருகின்றனர்.
பான் இந்தியா படங்களால், மிகப்பெரிய நடிகர்களுக்கு தான் நடிக்க வாய்ப்பே தவிர, இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நடிகர்களுக்கு பட வாய்ப்புகளே இல்லாத நிலை உ:ருவாகி விட்டது. குறிப்பாக துணை நடிகர்களில் பெரும்பாலானவர்களுக்கு நடிக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் குறைந்த பட்ஜெட் படங்களில்தான் அவர்களது நடிப்புக்கான கதாபாத்திரங்கள் இருக்கும்.
இப்போது தமிழ் சினிமாவில் 30 சதவீத படப்பிடிப்புகளே நடக்கின்றன. அதுவும் முன்னணி நடிகர்கள் படங்கள் மட்டும்தான். 70 சதவீத தயாரிப்பாளர்கள் படத் தயாரிப்பதையே விட்டு விட்டனர். கங்குவா, கூலி, தி கோட், ஜெயிலர் 2 என சர்வதேச தரத்தில், ஹாலிவுட் படங்களை இயக்கி வரும் சினிமா இயக்குனர்கள், தமிழ் சினிமாவுக்குரிய ரசனையை மெல்ல மெல்ல கொன்று வருகின்றனர். மீண்டும் ஒரு பாக்யராஜ், விசு, வி சேகர், பாரதிராஜா, சேரன், கே பாலசந்தர் என புதிய இயக்குனர்கள் வந்தால்தான், தமிழ் சினிமா காப்பாற்றப்படும்.





