தமிழ் சினிமாவில் இன்றைய சூழலில் ரசிகர்களை நம்பி படம் எடுப்பதை விடஓடிடி நிறுவனங்களை நம்பி படம் எடுக்கும் ஒரு சூழலில் தான் தயாரிப்பாளர்கள் இருந்து வருகின்றனர். ஏனெனில் படத்தின் பட்ஜெட்டில் 60 முதல் 70 சதவீதம் வரை விலையாக அந்த நிறுவனங்கள்தான் தருகின்றன. அதனால் ஓடிடி வியாபாரம் சினிமாவில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஆரம்பத்தில் அதிக கோடிகளை கொட்டி முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கிய முன்னணி ஓடிடி நிறுவனங்கள் சமீபகாலமாக தங்களது விலையை பாதியாக குறைத்து விட்டன. ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் படங்களை கூட மிக குறைந்த விலைக்கு தான் கேட்கின்றன. 2ம் நிலை 3ம் நிலை படங்களை வாங்கவே ஓடிடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால்தான் பல படங்கள் ரிலீஸூக்கு தயாரான நிலையிலும் ஓடிடி வியாபாரம் நடக்காமல் இன்னும் முடங்கி இருக்கின்றன. இதற்கிடையே நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என்று கூறப்படுகிறது. ஆனால் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் வந்தால் மீண்டும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையே ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. கருப்பு படத்தை ரூ. 43 கோடி ரூபாய் விலை கொடுத்து ஜீ 5 ஓடிடி நிறுவனம் டிஜிட்டல் உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமம் பெற்றுள்ளது. இந்த படத்துக்கு ரூ. 75 கோடி வரை விலை பேசிய நிலையில் 43 கோடி ரூபாய்க்கு மட்டுமே படம் வியாபாரம் நடந்துள்ளது.
இதில் தற்போது மற்றொரு சிக்கலும் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை வாங்கும் போது நெருக்கடியான சில நிபந்தனைகளை கொண்டு வந்துள்ளது. ஒரு புதிய படத்தை அதிக விலை கொடுத்து வாங்கினாலும், அந்த படம் தியேட்டரில் ரிலீஸாகி பெரிய வசூலை பெறவில்லை என்றால், வாங்கிய விலை அதிரடியாக குறிப்பிட்ட சதவீதம் வரை குறைக்கப்படும்.
அதே போல் அந்த படம் தியேட்டர்களில் மிகப்பெரிய வசூலை குவிக்கும் பட்சத்தில் ஓடிடி உரிமம் வாங்கிய விலையில் குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தி தரப்படும். இது ஒருவிதத்தில் நேர்மையான ஒப்பந்தம் என்றாலும் கருப்பு படம் ஓடிடி உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமம் மொத்தம் ரூ. 43 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. எனவே தியேட்டரில் கருப்பு படம் கணிசமான வசூலை குவித்தால் தான் ஓடிடி வியாபாரத்தில் அதே விலை தயாரிப்பாளருக்கு கிடைக்கும். தியேட்டர்களில் கூட்டம் இல்லை என்றால் ஓடிடியில் விற்ற விலையும் கணிசமாக குறையும் அபாயமும் உள்ளது.





