சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம், வசூலில் பிரம்மாண்ட சாதனையை படைத்தது. சிவராஜ்குமார், மோகன் லாலுக்கென என தனி தனி மாஸ் காட்சிகள் வைக்கப்பட்டதால் வெளிமாநிலங்களிலும் படம் ஹிட் அடிக்க, நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி திரைப்படம் வெற்றி வாகை சூடியது.
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு காரினை பரிசாக வழங்கியது. இதே போல் படத்தில் வேலை பார்த்த அனைத்து ஊழியர்களுக்கும், பிரியாணி விருந்து அளித்ததுடன், இரண்டு கிராம் தங்கம் வழங்கியது.
எதிர்பார்த்ததற்கு மேல் அதிக வசூலை ஜெயிலர் ஈட்டியதால், உற்சாகத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
இதனிடையே லியோ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடனும் ரஜினிகாந்த் கைகோர்த்துள்ளார். ரஜினியின் 171 வது திரைப்படமாக இது உருவாக இருக்கிறது. ஜெயிலர் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே, இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்க, சண்டை பயிற்சியாளராக அன்பறிவ் செயல்பட இருக்கின்றனர்.
இந்தப் படத்தின் நடுவே, ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் ரஜினிகாந்த் நடிக்கும் பட வேலைகள் ஆரம்பம் ஆகிறது. இதற்காக, என்கவுன்டர்களுக்கு எதிரான கதைக்களத்தை ஞானவேல் தயார் செய்திருக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் பிரபலம் அமிதாபச்சன் நடிக்கிறார். இதுபோக பகத் பாஸில், மஞ்சு வாரியர், ராணா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் ஆரம்பம் ஆகிறதாம். அதில் ரஜினிகாந்த் மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் நடிக்க இருக்கிறார்களாம். இதன் பிறகு, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் சூட்டிங்கை நடத்த ஞானவேல் திட்டமிட்டு உள்ளாராம். இந்தப் படத்திற்காக கன்னியாகுமரி வட்டார வழக்கு மொழியை ரஜினிகாந்த் பேச இருக்கிறாராம். இதில் போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலால் தலைவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.





