தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. நடிகர் விஜய் சினிமாவை விட்டு வெளியேறிய பிறகு அந்த இடத்தில் நடிகர் சூர்யா தான் பொருத்தமான நடிகராக இருப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேச்சு இருந்து வருகிறது. அதற்கு காரணம் விஜய் சூர்யா இருவருமே சமகாலத்தில் தமிழ் சினிமாவுக்கு வந்து உச்ச நடிகர்களாக வளர்ச்சி அடைந்தவர்கள்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கம் 2 படத்துக்கு பிறகு பெரிய வெற்றிப் படம் தராத நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியான கருப்பு படம் மூலம் சூப்பர் கம்பேக் தந்து இருக்கிறார். மேலும் அவர் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவர உள்ள சீன் படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இந்த படமும் மாஸ் ஹிட் படமாக இருந்து விட்டால் ஒரே ஆண்டில் 3 பிளாக்பஸ்டர் படங்களை தந்தவர் என்ற சாதனையும் பெருமையும் சூர்யாவுக்கு கிடைத்து விடும்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா சமீப காலமாக தனது ரசிகர் மன்றங்களை விரிவுபடுத்தி வருகிறார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரசிகர்களை அழைத்து அவர்கள் மத்தியில் பேசி வருகிறார். சமீபத்தில் நடந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் சூர்யா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை பரணிபுத்தூரில் நடந்த ரசிகர் மன்ற கூட்டத்தில் நடிகர் சூர்யா பங்கேற்றுள்ளார்.
அப்போது நடிகர் சூர்யா பேசியதாவது, அன்பை மட்டுமே நாம் விதைப்போம். ஒரு சமூக ஊடகத்தில் ஒரு முட்டாள் ஒரு பதிவை போட்டான் என்பதற்காக நாமளும் பேச ஆரம்பிக்கும் போது தான் நாம் காயப்பட்டு போகிறோம். நாம் நாமாகவே இருப்போம். அவங்க அவங்களாகவே இருக்கட்டும். நாம் எதுவும் பேசத் தேவையில்லை.
அவங்களுக்கு புரிய வைக்கணும் அவங்களை மாத்தணும்ன்னு முயற்சி பண்ணினால் கொஞ்சம் கஷ்டம்தான். சில பேருக்கு புரியும். முக்கால்வாசி பேருக்கு அது புரியாது. இதற்காக உங்க ஆற்றலை வீணாக்கிக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு பிடித்ததை நேர்மையா தினமும் பண்ணுங்க. நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று நடிகர் சூர்யா அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.





