முன்பெல்லாம் திருமண விழா என்றால் மணமகள் தலைநிமிர்ந்து கூட திருமணத்துக்கு வந்திருக்கும் உறவினர்களை பார்க்க மாட்டார். மணமகனும் உறவினர் மத்தியில் வராமல், தன் நண்பர்களுடன் மணமகன் அறையில் இருந்துவிடுவார். குறிப்பாக மணப்பெண் முகத்தை நேரடியாக பார்ப்பது என்பதே பெரிய விஷயமாக இருக்கும். அப்படிதான் நம் வீடுகளில், திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடந்தது.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு, திருமணங்கள் என்பதே ஏதோ ஒரு கொண்டாட்ட நிகழ்வு போல மாறிவிட்டது. சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் அப்படியே பின்பற்ற ஆரம்பித்து விட்டனர். அதில் உள்ள திருமண சம்பிரதாயங்களை கடந்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என வடமாநிலங்களில் ஸ்டைலை தமிழ்நாட்டு திருமணங்களிலும் புகுத்தி விட்டனர்.
அதனால் ஓரிரு தினங்களில் நடந்து வந்த திருமண விழாக்கள், இப்போது 7 நாட்கள் வரை நடக்கின்றன. தினம் தினம் புதுப்புது கொண்டாட்டங்களும் விருந்துகளும் என தூள் பறக்கின்றன. ஆனால் இது வசதிப்படைத்த செல்வ சீமான்களாக வாழ்பவர்களும், தொழிலதிபர்களும், பெரிய சினிமா நடசத்திரங்களும்தான் இந்த பார்மூலாவுக்கு மாறி இருக்கின்றனர்.
அதே நேரத்தில், இன்னும் கிராமப்புறங்களில் பழைய சம்பிரதாயப்படி தான் திருமணங்கள் எளிய முறையில் நடத்தப்படுகின்றன. எனினும் அங்கும் பல விஷயங்களில் மாற்றங்கள் செய்யபப்ட்டுள்ளன. குறிப்பாக திருமண விருந்து என்பது, கேட்டரிங் துறை மூலம் நடக்கிறது. சில இடங்களில் டோக்கன் சிஸ்டத்தில் ஓட்டல்களில் திருமண விருந்து பரிமாறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நடிகராக இருந்தவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இப்போதும் அவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால், பான் இந்தியா ஸ்டார் நடிகராக இருந்து வருகிறார். இன்னும் சில தினங்களில் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடைபெற உள்ளது. ரஜினிகாந்த், தமிழக முதல்வர் ஸ்டாலின் போன்றவர்களுக்கு அர்ஜூன், தம்பி ராமையா குடும்பத்துடன் நேரில் சென்று திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், திருமணத்துக்கு முந்தைய நாள், திருமண நாள், திருமண வரவேற்பு நாள் என 3 நாட்களும் மணமக்கள் நடன நிகழ்ச்சிக்காக கோடியோகிராபர் சாந்தி மாஸ்டர் முன்னிலையில், அவர்கள் நடனப்பயிற்சி செய்து வருகின்றனர். திருமண நிகழ்வில் எவ்வளவோ விஷயங்கள் இருக்க, நடனம் ஆடி மகிழ்விக்க, மணமக்கள் நடனப்பயிற்சி எடுத்து வருவதை அறிந்த பலரும், என்ன நடக்குது இங்கே, என்று கலாய்த்து வருகின்றனர்.





