- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசைஞானியை களங்கப்படுத்தும் எண்ணம் கிடையாது, கருப்பு படத்தில் இடம்பெற்ற காட்சியால் சர்ச்சை - தயாரிப்பு நிறுவனம்...

இசைஞானியை களங்கப்படுத்தும் எண்ணம் கிடையாது, கருப்பு படத்தில் இடம்பெற்ற காட்சியால் சர்ச்சை – தயாரிப்பு நிறுவனம் தந்த விளக்கம்!

- Advertisement -

இயக்குனர் ஆர்ஜே பாலாஜியின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிகை திரிஷா நடிப்பில் கடந்த 15ம் தேதி வெளியான திரைப்படம் கருப்பு. இதுவரை 160 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிய நிலையில் பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதுவரை சூர்யா நடித்த படங்களில் இதுவே அதிக வசூலை குவித்த முதல் படமாக உள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கருப்பு படத்துக்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த படம் நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து பக்தி சார்ந்த ஒரு கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

பல தடைகளை கடந்து இந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சூர்யாவுக்கு இந்த படம் ஒரு வலுவான கம்பேக் படமாக வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கருப்பு படத்தில் ஒரு காட்சியில் பாடல் காப்புரிமை தொடர்பாக இளையராஜா வழக்கு தொடர்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.

இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் கருப்பு படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் தந்துள்ளது. இதுகுறித்து கருப்பு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, கருப்பு படத்தில் இளையராஜா பெயரை பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகை ஆட்சி செய்துவரும் இசை அரசனை இசைஞானியை காயப்படுத்தும் எண்ணமோ களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை. உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட அந்த காட்சியால் இளையராஜாவோ அவரை சார்ந்தவர்களோ இசைஞானியின் ரசிகர்களோ பிறரோ மனம் புண்பட்டு இருந்தால் அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இளையராஜாவின் 80 90களில் வெளியான சூப்பர் ஹிட் பாடல்களை, புதிய படங்களில் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அது பெரிய அளவில் டிரண்டிங் ஆகி விடுவதால் தனது அனுமதியின்றி தனது இசையில் உருவான பாடல்களை யாரும் பயன்படுத்த கூடாது என இளையராஜா தொடர்ந்து கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்