ஒரு நல்ல கலை படைப்புக்கு விருது என்பது அந்த படைப்பை உருவாக்கியவர்களுக்கு தரப்படும் கௌரவமான பாராட்டாக இருக்கிறது. ரசிகர்களின் கைதட்டல்களே சிறந்த பாராட்டு பெரிய விருது என சிவாஜி கணேசன் போன்ற மூத்த கலைஞர்களே கூறியிருக்கின்றனர்.
எனினும் விருதுகள் என்பது ஒரு படைப்புக்கு கிடைக்கிற சமூக அங்கீகாரமாக சிறந்த அடையாளமாக உள்ளது. ஆனால் முன்பெல்லாம் விருதுகள் வழங்கபட்டன. இப்போது விருதுகள் வாங்கப்படுகின்றன. அதிலும் அரசு விருதுகளில் கூட அரசியல் விளையாடுவதும் பாரபட்சம் காட்டுவதும் அந்த படைப்பாளிகளுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் எரிச்சலை தருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு 2016 முதல் 2022ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை அறிவித்தது. இதில் எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பல படங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
திரைக்கு வராத ரசிகர்கள் பார்க்காத சண்டைக்காரி என்ற படத்துக்கு 3 விருதுகள் தரப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் வெளியான படம் டாணாக்காரன். போலீஸ் பயிற்சி பள்ளியில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் இருந்தது.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு சிறந்த படம். நடிகர் விக்ரம் பிரபுவுக்கு இது ஒரு முக்கிய படமாக இருந்தது. இந்த படத்தில் போலீஸ்காரர்கள் கேரக்டரில் எம்எஸ் பாஸ்கர் லால் நடிப்பு அருமையாக இருந்தது. இந்த படத்தில் சில காட்சிகளில் போஸ் வெங்கட்டும் நடித்திருந்தார்.
ஆனால் டாணாக்காரன் படத்தில் நடித்ததற்காக திமுக ஆதரவாளரான நடிகர் போஸ் வெங்கட்டுக்கு தமிழக அரசு சமீபத்தில் திரைப்பட விருதுகளில் அவரது பெயரை அறிவித்துள்ளது. சிறந்த குணச்சித்திர நடிகராக தேசிய விருது பெற்றவர் எம்எஸ் பாஸ்கர். மலையாள நடிகர் லால் நடிப்பு வேற லெவலில் இருக்கும். அப்படிப்பட்ட 2 பேரை விடவா போஸ் வெங்கட் இந்த படத்தில் சிறப்பாக நடித்து விட்டார் என்ற ரசிகர்களிடையே விமர்சனம் எழுந்துள்ளது.





