தமிழ் சினிமாவில் பாடும் நிலா பாலு என ரசிகர்களால் நிறைய அன்போடு அழைக்கப்பட்டவர் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர். ஏராளமான தடவை மத்திய அரசின் தேசிய விருது மாநில அரசின் விருதுகளை பெற்ற இசைக்கலைஞர்.
கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட காலகட்டத்தில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட எஸ்பிபி மறைந்தார். தமிழ் சினிமாவின் இசைக்குயில் மறைந்தது என்று ரசிகர்கள் வருந்தினர். பாடகராக மட்டுமின்றி நடிகராக இசைக்கலைஞராக டப்பிங் கலைஞராக மிகச்சிறந்த ஒரு மனிதராக பண்பாளராக வாழ்ந்து மறைந்தவர் எஸ்பி பாலசுப்ரமணியம்.
குறிப்பாக மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ என்று கேளடி கண்மணி படத்தில் அவர் மூச்சு விடாமல் பாடிய பாடல் பட்டிதொட்டி எங்கும் அந்த காலகட்டத்தில் ஒலித்தது. அதே போல் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவருக்கும் பல நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி திரையில் அவர்களது குரலாக ஒலித்தவர் எஸ்பிபி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 31ம் தேதி கேரளம் மாநிலம் பாலக்காட்டில் எஸ்பிபியின் 10 அடி திருவுருவ சிலை திறப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பு விடப்பட்டது. பாடகர் கேஜே ஜேசுதாஸ் மகன் விஜய் ஜேசுதாஸ் நேரில் ரஜினியிடம் அழைப்பிதழ் தந்து வருமாறு அழைத்த நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு ரஜினி செல்லவில்லை. இதுகுறித்து கடும் விமர்சனம் எழுந்தது.
ஏனெனில் ரஜினிக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்ததே எஸ்பிபிதான். இந்நிலையில் ரஜினி இன்று வெளியிட்ட ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, எஸ்பிபி யின் பாடல் திறமை மட்டுமல்ல, மனிதநேயமும் அற்புதமானது. ஒருமுறை அமெரிக்காவிலிருந்து நான் விமானத்தில் சென்னைக்கு பயணித்தேன். அப்படி வரும்போது மும்பையில் விமானத்தில் எஸ்பிபி ஏறினார்.
அவர் விமானத்தில் ஏறியதும் அங்கு இருந்த பயணிகள் அனைவரும் சங்கராபரணம் பாடலை பாடுமாறு அவரிடம் கேட்டனர். அவர் பாடினார். ஆனால் மீண்டும் மீண்டும் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டதால் சலிக்காமல் அதிகாலை 1:30 மணி முதல் 3 மணி வரை பாடிய அனைவரையும் மகிழ்வித்தார். அப்படி ஒரு சிறந்த பண்பாளர். அவர் நினைவாக பாலக்காட்டில் சிலை அமைத்தது ரசிகர்கள் மற்றும் இசை உலகிற்கு பெருமை என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.





