இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி படம் கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து 2024ம் ஆண்டில் டிமாண்டி காலனி 2ம் பாகம் வெளியாகி அந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது டிமாண்டி காலனி 3ம் பாகம் தயாராகி உள்ளது.
டிமாண்டி காலனி: தி என்ட் ஈஸ் டூ பார் என்ற பெயரில் உருவாகி உள்ள இந்த படத்தில் அருள்நிதி பிரியா பவானி சங்கர் குரு சோமசுந்தரம் மீனாட்சி கோவிந்தராஜன் அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
சென்னை மற்றும் லடாக் போர்ச்சுக்கல் மற்றும் மால்டா போன்ற வெளிநாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் படப்பிடிப்பு 80 நாட்களாக நடத்தப்பட்டு சமீபத்தில்தான் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்போது போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வருகிற ஜூன் 24ம் தேதி டிமான்டி காலனி 3 படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் டிமாண்டி காலனி 3 படம் குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியதாவது, டிமாண்டி காலனி படம் 6 பாகங்கள் வரை வெளியாகும். அதற்கான கதைகள் இப்போதே தயாராக உள்ளது. எத்தனை திரில்லர் படங்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அதில் டிமாண்டி காலனி படம் 2 பாகங்களும் தனித்து வித்தியாசம் காட்டும். அந்த வகையில் தான் இப்போது டிமாண்டி காலனி 3 படத்தையும் உருவாக்கி இருக்கிறோம்.
வெறும் ஹாரர் திரில்லர் படமாக மட்டும் இல்லாமல் கேரக்டர்களின் எமோஷனலும் புதிய கருவை கொண்டு வந்து தருகிற முயற்சியும் இந்த கதையில் முக்கிய அம்சங்கள் ஆகும். டிமாண்டி காலனி 2 படம் வந்த போது பாகம் 1 ரொம்பவும் நன்றாக இருந்தது என்றார்கள். முதல் படம் எடுத்த போது அடுத்தடுத்து அது போகப் போகிறது என்ற எண்ணம் இல்லாமல் செய்த படம்.
அதே 2வது படத்தை செய்யும்போது லாஜிக்கையும் சொல்லி அதை கதையோடு ஒருங்கிணைக்க வேண்டும். ஒன்றுக்கொன்று கனெக்ட் ஆக வேண்டியதும் அவசியம். இப்போது ஏன் எதனால் எப்படி என்று சொல்லி இருக்கிறோம். இதன் பின்னணியில் ஒரு சாபம் இருப்பதையும் அது என்ன சாபம் அதற்கான ஆரம்பம் என்ன என்பதையும் சொல்லி இருக்கிறோம். இந்த படம் 6 பாகங்கள் வரை இருக்கிறது என்று இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியிருக்கிறார்.





