நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 2026 ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் என ஏற்கனவே கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு விட்டது. அதே போல் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வருகிற ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் என்றும் கூறப்பட்டது.
நடிகர்கள் விஜய் சிவகார்த்திகேயன் இரண்டு பேருமே தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் இந்த முடிவு செய்யப்பட்டது.
விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆன பிறகு 5 நாட்கள் கழித்து பராசக்தி படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதற்கிடையே பராசக்தி ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் என்ற தகவலும் சில நாட்களுக்கு முன்பு வேகமாக பரவியது.
ஆனால் இதை படக்குழு தரப்பில் உறுதி செய்யவில்லை. ஜனவரி 14ம் தேதி தமிழ்நாட்டில் பராசக்தி ரிலீஸ் ஆகும். ஜனவரி 23 அல்லது 24ம் தேதி ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் பராசக்தி ரிலீஸ் ஆகும் என்றுதான் சொல்லப்பட்டது. ஏனெனில் தெலுங்கில் 3 பெரிய நடிகர்களின் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளன.
பராசக்தி படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் நேற்று மதியம் ஈரோட்டில் விஜயமங்கலம் அருகே சரளை என்ற பகுதியில் பிரமாண்டமான தவெக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய் தீய சக்தி திமுக தீய சக்தி திமுக என்று பகிரங்கமாக திமுகவை விமர்சித்து பேசினார். இது இணையத்தில் வைரலானது.
இதையடுத்து பராசக்தி படத்தின் தயாரிப்பாளரான துணை முதல்வர் உதயநிதி, வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களை போனில் அழைத்து, வருகிற ஜனவரி 10ம் தேதிதான் பராசக்தி படம் ரிலீஸ் ஆகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. எல்லா தியேட்டர்களிலும் 2 பெரிய ஸ்கிரீன் பராசக்தி படத்துக்கு ஒதுக்கி விட வேண்டும் என்று உத்தரவாக கூறியிருக்கிறார்.
ஈரோட்டில் பேசிய நடிகர் விஜய் தீய சக்தி திமுக தீய சக்தி திமுக என்று ஆவேசமாக பேசியதால் திமுகவினர் பலத்த கோபத்தில் இருக்கின்றனர். அதனால்தான் விஜய் நடித்த ஜனநாயகனுக்கு சிக்கலை ஏற்படுத்த வரும் 10ம் தேதியே பராசக்தி படம் ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் போதிய தியேட்டர்கள் கிடைப்பதிலும் ஜனநாயகன் படத்துக்கு பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.





