நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு முன்னணி நட்சத்திர நடிகராக மாறியிருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான அமரன் படத்துக்கு பிறகு அவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது. அரசியலுக்கு சென்றதால் நடிகர் விஜய் சினிமாவில் விட்டுச் சென்ற இடத்துக்கு சிவகார்த்திகேயன் மிக விரைவில் வந்துவிடுவார் என்றும் ஒரு தரப்பினர் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் நடித்த ஜனநாயகன் படம் 9ம் தேதியும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் 10ம் தேதியும் வெளியாக வேண்டிய சூழல் தமிழ் சினிமாவில் உருவானது. விஜய்க்கு எதிராக களத்தில் சிவகார்த்திகேயன் மோத தயாராகி விட்டார் என்றும் ஒருவேளை ஜனநாயகனை வசூலில் பராசக்தி முந்தினால் அது வேற லெவல் சம்பவமாக இருக்கும் என்றும் எஸ்கே ரசிகர்கள் பேசி வந்தனர்.
ஆனால் சென்சார் பிரச்னை காரணமாக இன்று வெளியாக வேண்டிய ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில் சென்சார் போர்டு தரப்பில் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளதால் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.
இதே போல் பராசக்தி படத்துக்கும் சென்சார் போர்டில் சில சிக்கல்கள் ஏற்பட்டது. படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகளும் வசனங்களும் இருப்பதாக சென்சார் குழு தெரிவித்த நிலையில் அந்த காட்சிகளை மாற்றவும் திருத்தவும் நீக்கவும் படக்குழு தரப்பில் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் ஜனநாயகன் போலவே பராசக்தி படத்துக்கும் சிக்கல் ஏற்படுவதாக கூறப்பட்டது.
அதனால் நாளை 10ம் தேதிக்குள் பராசக்தி படத்துக்கு சென்சார் தரப்பில் சான்றிதழ் கிடைக்க வாய்ப்பில்லை. அதனால் இந்த படமும் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளது. அதனால் இந்த முறை தை பொங்கலை சிரஞ்சீவி நடித்த மன ஷங்கர வரபிரசாத் காரு மற்றும் பிரபாஸ் நடித்த தி ராஜா சாப் ஆகிய தெலுங்கு படங்களை பார்த்துதான் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்கிற மோசமான ஒரு சூழலும் ஏற்பட்டது.
ஆனால் இப்படி ஒரு நிலை ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் இப்போது பராசக்தி படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் நாளை 10ம் தேதி ஏற்கனவே அறிவித்தபடி தியேட்டர்களில் பராசக்தி படம் ரிலீஸாகும் என்ற அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜனநாயகன் படம் வராததால் பராசக்தி படம் மிக அதிகமாக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





