தமிழ் சினிமாவில் இரண்டு சிகரங்களாக இருப்பவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன். ரஜினி கமல் இருவரும் வளர்ந்து வந்த ஆரம்ப காலத்தில் நிறைய படங்களில் இணைந்து நடித்தனர். 16 வயதினிலே மூன்று முடிச்சு நினைத்தாலே இனிக்கும் அலாவுதீனும் அற்புத விளக்கும் என பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தனர். அந்த படங்களும் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன.
ஆனால் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர்களும் வினியோகஸ்தர்களும் ரஜினி கமல் படங்களால் கணிசமான லாபம் சம்பாதித்த நிலையில் ரஜினி கமல் இருவருக்கும் சம்பளத்தை உயர்த்தி தராமல் ஏமாற்றினர். இதை புரிந்துக்கொண்ட பிறகு ரஜினி கமல் இருவரும் இனி தனித்தனியாக நடித்தால் தான் நமக்கான சம்பளமும் அங்கீகாரமும் கிடைக்கும் என கலந்து பேசி முடிவெடுத்து நடிக்க துவங்கினர்.
கடந்த 1979ம் ஆண்டில் ரஜினி கமல் இந்த முடிவை எடுத்த பிறகு 47 ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக நடித்து தமிழ் சினிமாவில் மாபெரும் ஜாம்பவான்களாக மாறியிருக்கின்றனர். ஆனால் மீண்டும் ரஜினி கமல் இணைந்து நடிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அவர்களது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து அப்படி ஒரு மாஸ் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் தயாரிப்பில் ரஜினி கமல் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது என முடிவானது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவும் அனிருத் இசையமைக்கவும் கமிட் செய்யப்பட்டார். மேலும் இந்த படத்தில் ரஜினி வில்லன் கமல் ஹீரோ என்றும் கதாநாயகி திரிஷா என்றும் தகவல் வெளியானது.
இந்த படத்தின் பிரமோ வீடியோ ஒன்றும் வெளியாகி இணையத்தில் வைரலானது. ரஜினி கமல் இருவரும் வெவ்வேறு அறைகளில் ரெடியாகி வெளியே வந்து ஒன்றாக நடந்து வருவதும் காரில் ஏறுவதும் காரை கமல் ஓட்ட ரஜினி நெல்சன் அனிருத் அதில் இருப்பது, அப்போது யார் ஹீரோ என கமல் கேட்கவும் அதற்கு ரஜினி, கேட்கறாங்க இல்லே சொல்லுங்க ஜி என நெல்சனிடம் கிண்டலாக சொல்வதும் என அந்த வீடியோ வைரலானது.
ஆனால் இப்போது அந்த படம் டிராப் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில், இப்படிப்பட்ட ஒரு சூழலில் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்க விரும்பவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதி சிஇஓவாக இருந்தாலும் உதயநிதியின் முடிவுதான் இறுதி என்பதால் ரஜினி கமல் படம் டிராப் என்பது உறுதி என்றும் கூறப்படுகிறது.





