தமிழ்நாட்டில் உருவாகும் தமிழ் படங்களுக்கு ஆங்கில தலைப்பு வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மொழிகளில் வெளியாகும் ஓடிடி தளங்களில் தமிழ் தலைப்புகள் வைத்தால் படம் ஓடாது என்பதால் ஓடிடி நிறுவனங்களின் கட்டளைக்கு கட்டுப்பாட்டு இப்படி தமிழ் படங்களுக்கு ஆங்கில தலைப்புகள் வைக்கப்படுகின்றன.
வியாபார ரீதியாக இப்படி செய்யப்படும் ஒரு தவறு தமிழ் சினிமாவின் புகழை கலாசாரத்தை அதன் மரியாதையை கெடுக்கிறது என்கிற ஒரு உணர்வு தமிழ் பட இயக்குனர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் இல்லை. மற்ற மொழி படங்களுக்கு இல்லாத நெருக்கடி தமிழ் படங்களுக்கு மட்டும் ஏன் என்பதை கோலிவுட் சார்ந்த யாருமே யோசிப்பது இல்லை.
இதனால் தமிழ் சினிமாவில் ஆங்கில தலைப்புகள் அதிகரித்து வருகின்றன. டூரிஸ்ட் ஃபேமிலி வித் லவ் டிடிடி தக்லைஃப் கேம் சேஞ்சர் லக்கி குட் பேட் அக்லி என இப்படி ஆங்கில டைட்டில்களை வைக்கும் போது நகரங்களில் உள்ள ரசிகர்கள் அதை ஒரு பொருட்டாக கவனிக்க மாட்டார்கள்.
ஆனால் கிராமப்புற ரசிகர்களுக்கு படங்களின் பெயர்கள் சற்று கவனத்தில் இருக்கும். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். கடந்தாண்டு வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து அவர் வித் லவ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். இந்த படம் நேற்று ரிலீஸானது. படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.ஆனால் கிராமங்களில் உள்ள தியேட்டர்களில் வெளியான வித் லவ் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. தியேட்டர்களில் போதிய வசூலும் இல்லை.
வித் லவ் என்ற ஆங்கில டைட்டிலை பார்த்து பலரும் இந்த படம் பார்க்க வராமல் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது படக்குழுவினரை அப்செட் செய்துள்ளது. அதே நேரத்தில் இந்த படத்தின் தலைப்பு தமிழில் இருந்திருந்தால் ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஓடிடி நிறுவனங்கள் தரும் லாபத்துக்காக தமிழை விட ஆங்கிலத்துக்கு தமிழ் சினிமா தரும் ஆதரவு எப்போது மாறும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.





