தமிழ் சினிமாவில் சக்சஸ் ஹீரோ என்ற அடையாளத்துடன் வலம் வருபவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். அவர் திரைப்பட இயக்குனராக கோமாளி என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நடிகர் ரவிமோகன் காஜல் அகர்வால் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த கோமாளி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து லவ்டுடே என்ற படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கினார். இந்த படத்தில் அவரே நாயகனாகவும் நடித்தார். இவானா சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்த சூப்பர் ஹிட் படமாகவும் லவ் டுடே அமைந்தது.
தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடித்த அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் படமும் அடுத்து டியூட் படமும் தொடர் வெற்றிப் படங்களாக இருந்தன. அதனால் தொடர்ந்து 4 ஹிட் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதனின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் எல்ஐகே. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற இந்த படம் பல மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு 2025ல் காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி 13ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்ட இந்த படம் ஓராண்டாகியும் திரையில் வெளியாகவில்லை.இப்போது நடப்பாண்டில் வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு 12ம் தேதி எல்ஐகே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் இன்னும் எல்ஐகே படத்தை சென்சார் போர்டுக்கே அனுப்பாமல் படக்குழு தாமதம் செய்து வருகிறது.
எல்ஐகே படத்துக்கு இன்னும் டிஜிட்டல் ரைட்ஸ் சாட்டிலைட் ரைட்ஸ் வியாபாரம் நடக்காத நிலையில் படத்தை தணிக்கை வாரியத்துக்கு அனுப்ப படக்குழு முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் எல்ஐகே படம் ரிலீஸ் இப்போதைக்கு இருக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் பிரதீப் ரங்கநாதன் ரசிகர்கள் குழப்பத்தில் தவிக்கின்றனர்.





