கடந்த 2023ம் ஆண்டில் வெளியான படம் துணிவு. எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் மஞ்சுவாரியார் நடித்த இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக இருந்தது. இந்த படம் 2023ம் ஆண்டில் பொங்கலுக்கு வெளியான நிலையில், நல்ல வரவேற்பை பெற்றது. எதிர்பார்த்ததை விட கணிசமான லாபத்தையும் அள்ளித் தந்தது.
அதன் பிறகு தனது அடுத்த படத்தில் நடிகர் அஜீத்குமார் நடிக்க ஆயத்தமான போது அவரது தந்தை சுப்ரமணியம் காலமானார். அதன்பிறகு பல மாதங்கள் தாமதமாக அக்டோபரில் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கியது. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் இந்த படம் உருவானது.
பல்வேறு இயற்கை சீற்றங்கள், இடையூறுகள், தடைகள் காரணமாக விடாமுயற்சி படப்பிடிப்பு பல விதங்களில் தடைபட்ட நிலையில், கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்தது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்திலும் நடிகர் அஜீத்குமார் நடித்து முடித்து விட்டார்.
இந்நிலையில் கடந்த பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி படம், பிறகு 3 வாரங்கள் கழித்து பிப்ரவரி 6ம் தேதி வெளியானது. 2 ஆண்டுகளுக்கு பின் வெளியான இந்த படத்தை அஜீத்குமார் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த நிலையில், படம் பலத்த ஏமாற்றத்தை தந்தது. மாஸ் ஹீரோ அஜீத்குமாரை பலவிதங்களில் டம்மியாக்கியதால் இந்த படம் கடும் விமர்சனத்தில் சிக்கியது.
எனினும் விடாமுயற்சி படத்தின் வசூல் நிலவரம் குறித்து பலவிதமான வதந்திகள் பரவிய நிலையில், படத்தின் உண்மையான வசூல் நிலவரம் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி, வீடியோ ஒன்று வெளியிட்டு முக்கிய விவரங்களை அதில் கூறியிருக்கிறார். அதன்படி 298 கோடி ரூபாய் பட்ஜெட்டில் விடாமுயற்சி படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் அஜீத்குமாருக்கு ரூ. 105 கோடி, திரிஷாவுக்கு ரூ. 5 கோடி, அர்ஜூனுக்கு ரூ. 7 கோடி மகிழ் திருமேனிக்கு ரூ. 5 கோடி என மொத்தம் ரூ. 122 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது. டிஜிட்டல் ரைட்ஸ் ரூ. 70 கோடி சேட்டிலைட் ரைட்ஸ் ரூ. 30 கோடி ஆடியோ ரைட்ஸ் ரூ. 15 கோடி என பிஸினஸ் நடந்துள்ளது. மொத்தமாக இந்த படத்துக்கு வசூலான தொகை ரூ. 170 கோடி மட்டும்தான். அதனால் விடாமுயற்சி படத்தை தயாரித்த வகையில், ரூ. 128 கோடி வரை லைகா நிறுவனம் நஷ்டமடைந்துள்ளது என ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.





