மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படமே அவருக்கு நல்ல அடையாளத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து கைதி மாஸ்டர் விக்ரம் லியோ கூலி என அடுத்தடுத்த படங்களை இயக்கினார். இதில் லியோ கூலி படங்கள் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களை பெற்றது.
குறிப்பாக லியோ படத்தில் இரட்டை பிறவி ஜாதகம் நரபலி போன்ற விஷயங்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய்விட்டனர். இந்த காலத்திலும் இப்படி ஒரு கான்செப்ட்டில் படம் எடுத்திருக்கிறாரே என பலரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜை கடுமையாக விமர்சித்தனர். இந்த படத்தின் தோல்விக்கு இதுவே முக்கிய காரணமாக இருந்தது.
அதே போல் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்திலும் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள் காணப்பட்டன. சத்யராஜ் உபேந்திரா அமீர்கான் போன்ற நட்சத்திர நடிகர்கள் சில காட்சிகளில் டம்மியாக வந்து போகும் நிலையில் படம் இருந்தது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. ரஜினிக்கே கூலி படம் பெரிய அதிருப்தியை தந்துவிட்டது.
அடுத்ததாக ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் கூலி படத்துக்கு கிடைத்த மோசமான விமர்சனங்களால் கமல் ரஜினி இருவருமே உஷாராகி விட்டனர். அதனால் சுந்தர் சி க்கு அந்த படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்த நிலையில் அவர் சில காரணங்களால் வெளியேறி விட்டார்.
இப்போது அந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குவது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரஜினியின் 173வது படமாகும். அதே நேரத்தில் கூலி படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் எதுவும் இதுவரை இல்லை. ஆனால் இப்போது ஒரு படம் அவர் இயக்குவது 99 சதவீதம் முடிவாகி விட்டதாக தெரிய வந்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் இப்போது பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோவை பொங்கல் தினத்தை முன்னிட்டு சற்று நேரத்துக்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.





