- Advertisement -
Homeபொழுதுபோக்குநல்லவர்களின் சின்னம் விசில்… நாடு காப்பவர்களின் சின்னம் விசில்… நமது சின்னம் விசில் - தவெக...

நல்லவர்களின் சின்னம் விசில்… நாடு காப்பவர்களின் சின்னம் விசில்… நமது சின்னம் விசில் – தவெக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட பதிவு வைரல்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கி அறிவித்துள்ளது. வருகிற சட்டசபை தேர்தலில் தவெக கட்சியின் சின்னம் விசில் என்பது உறுதியாகி விட்டது. பிகில் படத்தில் நடித்த நடிகர் விஜய்க்கு தவெக கட்சியின் சின்னமாக விசில் சின்னம் கிடைத்திருப்பது விஜய் ரசிகர்களை தவெக கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தவெக தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாக திகழும் தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கி இருக்கிறது.

- Advertisement -

இந்திய தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றி கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெரு மகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள் அந்த இலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் எனில் மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பது தான் விசில். அந்த வகையில் விசிலை பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.

- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக்கழகம் ஈட்டப் போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்து கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே. இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்து இருக்கும் பரிசு.

நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்களின் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம் என்று நடிகர் விஜய் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்