ஒரு கலைஞனுக்கு தனது படைப்பு பாராட்டப்படும் போதும், மற்றவர்களால் புகழப்படும்போதுதான் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. தனது படைப்புக்கு கிடைக்கும் அந்த பாராட்டும், புகழும்தான் தனக்கான, தன் திறமைக்கான அங்கீகாரமாக அந்த படைப்பாளி எடுத்துக் கொள்வது இயல்பாக இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் அவர்களது விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.
அதுபோல் தமிழ் சினிமாவில் ஒரு நிகரற்ற இசை சக்ரவர்த்தியாக மதிக்கப்படுவர் இசைஞானி இளையராஜா. கடந்த 47 ஆண்டுகளாக அவரது இசையை தமிழ் சினிமா கொண்டாடி வருகிறது. இளையராஜா இசையை குறை சொல்ல யாரும் இல்லை என்னும் அளவுக்கு, அவரது இசை எப்போதுமே தேனில் விழுந்த பலாச்சுளைதான். அதுவும் கடந்த 1980, 90களில் அவரது பாடல்கள், இன்றும் கேட்க கேட்க ஆனந்தம் தருபவை.
ஆனால் சமீபகாலமாக நான் இசையமைத்த பாடல்கள் எனக்கு மட்டுமே சொந்தம், வியாபார ரீதியாக யாரும் அதை பயன்படுத்தக் கூடாது என்று இளையராஜா மல்லுக்கு நிற்கிறார். கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார். கூலி, மஞ்சும்மெல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறார்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பல படங்களில் இளையராஜா இசை பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சுப்ரமணியபுரம் படத்தில், இளையராஜா இசையும், பாடல்களும் இடம்பெற்றுள்ளது. அதே போல் பல ஹிட் பாடல்களை, தங்களுக்கு தேவையான இடங்களில் பல இடங்களில் பயன்படுத்தி உள்ளனர்.
அப்படி தனது இசையில் உருவான பாடல்கள் பயன்படுத்தப்பட்ட படங்களின் லிஸ்ட் தயார் செய்து, அந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மஞ்சும்மெல் பாய்ஸ் படத் தயாரிப்பாளரிடம் ரூ. ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார் இளையராஜா.
இதையடுத்து, தயாரிப்பாளர்கள் பலரும் தங்களது படங்களை இயக்கிய இயக்குனர்களை அழைத்து, இளையராஜா பாடல்களை, அவரது இசையை நமது படங்களில் பயன்படுத்தி இருந்தால், உடனடியாக அதை தூக்கி விடுங்கள். அதற்கு பதிலாக வேறு இசையை பயன்படுத்துங்கள். இளையராஜா இசையே வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளனர். எல்லா படங்களில் இருந்தும் அதை அகற்றி விடுங்கள் என்று கூறிவிட்டனர். இப்படியா ஒரு இசைஞானி தன் படைப்புகளை அவமதிப்பது என இளையராஜாவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.





