நடிகர் பிரபாஸ் பான் இந்தியா நடிகராக மாறிவிட்ட நிலையில் அவரது படங்கள் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியாகி வருகின்றன. ஆனால் அவர் நடித்த பாகுபலி பாகுபலி 2 படங்களுக்கு பிறகு கல்கி 2898 ஏடி படம் மட்டுமே கணிசமான வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் கலவையான விமர்சனங்களையும் சந்தித்தது. இப்போது வெளியாகி உள்ள தி ராஜா சாப் படத்துக்கும் பெரிய வரவேற்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் தெலுங்கு நடிகராக இருந்த பிரபாஸ் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் ஜனரஞ்சகமான நடிப்பை தந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் இப்போது பான் இந்தியா நடிகர் என்ற முத்திரை விழுந்துள்ளதால் பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே அவர் நடிக்க வேண்டியுள்ளது. ஆனால் படத்தில் உள்ள பிரமாண்டம் அளவுக்கு படத்தின் திரைக்கதை வலுவாக இல்லை என்று அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
அந்த வரிசையில் இப்போது தி ராஜா சாப் படமும் பிரபாஸ் நடிப்பில் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்கிற விமர்சனம் தான் எழுந்துள்ளது. இந்த படத்தில் மாளவிகா மோகனன் நிதி அகர்வால் ரித்தி குமார் சஞ்சய் தத் யோகிபாபு போன்றவர்கள் நடித்திருக்கின்றனர்.
எனினும் படம் அவ்வளவு வரவேற்பை பெறாமல் போனாலும் 9 மற்றும் 10ம் தேதிகளில் 2 நாட்களில் இந்த படம் உலகளவில் ரூ. 140 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் கலவையான விமர்சனங்கள் காரணமாக பெரிய அளவில் வசூலை எட்டாது என்றும் ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நேற்று வெளியான படம் பராசக்தி. இந்த படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயனும் வில்லனாக ரவி மோகனும் நடித்திருக்கின்றனர். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட களம்தான் படம் என்றாலும் அதில் பல விஷயங்களை இயக்குனர் கோட்டை விட்டுள்ளதாகவும் படத்தில் பல விஷயங்கள் சுவாரசியமே இல்லாமல் உள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் பராசக்தி படம் நேற்று முதல் நாளில் உலகம் முழுவதும் மொத்தம் 24.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 13.5 கோடி ரூபாய் என்றும் சென்னையில் மட்டும் ரூ. 2 கோடி என்றும் வசூல் நிலவர புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்று 2ம் நாளில் பல தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி போய் இருக்கின்றன. மேலும் அடுத்து 4 புதிய படங்கள் வரும் 14 15ம் தேதிகளில் ரிலீஸாக உள்ளதால் பராசக்தி வசூல் 100 கோடி ரூபாயை எட்டுமா என்பதே சந்தேகம்தான்.





