வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்த படம் மூக்குத்தி அம்மன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் தொடர்ச்சியாக சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகி விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டு பிறகு 120 கோடி ரூபாய் வரை பட்ஜெட் எகிறி விட்டது. விஎஃப்எக்ஸ் சிஜி பணிகளில் ஏகப்பட்ட செலவை படம் இழுத்து விட்டது. சுந்தர் சி நயன்தாரா போன்றவர்களுக்கு பெரிய இமேஜ் இல்லாத நிலையில் இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை எடுப்பது தயாரிப்பாளர் ஐசரி கணேஷூக்கு ரிஸ்க் என்றும் பலர் விமர்சித்தனர்.
ஏற்கனவே பல படங்களை அதிக பட்ஜெட்டில் எடுத்த வகையில் 200 கோடி ரூபாய் வரை அவர் நஷ்டத்தை சந்தித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படம் வியாபாரத்துக்கு தயாரான நிலையில் டிஜிட்டல் உரிமம் சாட்டிலைட் உரிமத்துக்காக ஹாட் ஸ்டார் நிறுவனத்துக்கு படத்தின் 1 மணி நேர பிஸினஸ் கட் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது.
முதலில் ஐசரி கணேஷ் தரப்பில் கேட்ட விலைக்கு மறுத்த ஹாட் ஸ்டார் நிறுவனம், ஒரு மணி நேர படக்காட்சிகளை பார்த்த பிறகு அசந்து போயிருக்கிறது. பிறகு இந்த படத்தின் சாட்டிலைட் டிஜிட்டல் உரிமம் என மொத்தம் 50 கோடி ரூபாய்க்கு விலை தந்து பெரிய வியாபாரம் நடந்துள்ளது.
இப்படி ஆரம்பமே மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு பாசிட்டிவ் வரவேற்பு கிடைத்தால் தமிழ்நாடு உள்பட கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா என பிற மாநிலங்களிலும் இந்த படத்தை நேரடியாக தியேட்டர்களுக்கு வியாபாரம் செய்ய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முன்வந்துள்ளார். அதனால் அவரே மற்ற மாநிலங்களுக்கும் வினியோகம் செய்கிறார்.
அதன்படி தெலுங்கானா ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் மைத்ரி மூவி மேக்கர்ஸ், சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் மூலமாகவும் கேரளாவில் நடிகர் பகத் ஃபாசில் மூலமாகவும் தமிழ்நாட்டில் நேரடியாகவும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை ரிலீஸ் செய்ய ஐசரி கணேஷ் திட்டமிட்டுள்ளார். இதனால் இந்த படம் கருப்பு படம் போல ரூ. 300 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





