எப்போதுமே அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்பங்களில் அறிவியல் அடையும் முன்னேற்றங்களும் மனித வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவி செய்கின்றன. இதனால் பல விதங்களில் மனிதர்களின் வாழ்க்கை தரம் உயர்வது மட்டுமின்றி பல விஷயங்களில் அந்த அறிவியல் வளர்ச்சி பல அதிசயங்களை நிகழ்த்தி நம்மை சந்தோஷப்படுத்துகிறது.
இப்போது ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி பெரிய அளவில் வளர்ச்சி பெற்று பலவிதங்களில் அபரிமிதமான தோற்றங்களை அது காட்சிப்படுத்துகிறது. ஆனால் அதே நேரத்தில் அந்த ஏஐ தொழில்நுட்பத்தை சிலர் தவறாகவும் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக உயிருடன் இல்லாத பெரிய நடிகர்களை திரையில் உயிருடன் கொண்டு வர முடியும். அவர்களது காட்சிகளை திரையில் தத்ரூபமாக காட்ட முடியும்.
அந்தளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. ஆனால் ஒரு சிலர் இதை அப்படியே தவறான முறையில் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வீடியோக்களை வைரலாக்கி விடுகின்றனர். அதாவது பிரபல நடிகைகளை மிகவும் கவர்ச்சியாகவும், உடலில் ஆடையின்றியும் சக நடிகர்களுடன் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போலவும் தத்ரூபமாக அதை ஏஐ மூலம் உருவாக்கி பரவ விடுகின்றனர்.
இது உண்மையா, ஏஐ தொழில்நுட்பமா என அதை பார்ப்பவர்களே சந்தேகப்படும் அளவுக்கு அவை இருக்கின்றன. இதுகுறித்து நடிகை ஸ்ரீலீலா தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடித்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் அவர் ஏஐ தொழில்நுட்பம் குறித்து தனது ஆதங்கத்தை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஒரு பதிவில் நடிகை ஸ்ரீலீலா கூறியிருப்பதாவது, வலைதள பயன்பாட்டாளர்கள் ஒவ்வொருவரையும் கைகூப்பிக் கேட்கிறேன். ஏஐ யால் உருவாக்கப்பட்ட அபத்தமான விஷயங்களுக்கு ஆதரவு தர வேண்டாம். தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. தொழில் நுட்ப வளர்ச்சியை வாழ்க்கையில் எளிமையாக்க வேண்டுமே தவிர சிக்கல் ஆக்க கூடாது. வேலை காரணமாக ஆன்லைனில் நடக்கும் பல விஷயங்களை நான் அறியாமல் இருந்தேன். அதை கவனத்துக்கு கொண்டு வந்த எனது நலம் விரும்பிகளுக்கு நன்றி.
இது தொந்தரவு செய்யக் கூடியதாகவும் பேரழிவு தரக்கூடியதாகவும் உள்ளது. என் சக ஊழியர்கள் அனைவருக்காகவும் குரல் கொடுக்கிறேன். கண்ணியத்துடனும் மரியாதையுடனும் என் பார்வையாளர்கள் மீது நம்பிக்கையுடன் நடந்துக்கொள்ளுங்கள். தயவு செய்து எங்களுக்கு ஆதரவாக நில்லுங்கள் என்று அந்த பதிவில் நடிகை ஸ்ரீலீலா ஆதங்கமாக கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





