வலிமை, துணிவு படங்களுக்கு பிறகு அஜீத்குமார் நடிப்பில், இதுவரை ஒரு படம் கூட வெளிவரவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி மகிழ்திருமேனி இயக்கத்தில் துவங்கிய படம் விடாமுயற்சி. நடிகர் அஜீத்குமார், திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்த இந்த படம், 8 மாதங்களாகியும் இன்னும் பாதியிலேயே நிற்கிறது.
அஜர்பைஜானில் நடந்த இந்த ஷூட்டிங்கில் ஏகப்பட்ட தடைகளும், இடையூறும் ஏற்பட்டது. படப்பிடிப்பை துவக்கிய சில வாரங்களிலேயே படத்தின் கலை இயக்குனர், அஜீத்குமாரின் நெருங்கிய நண்பர் மிலன் காலமானார். அதன்பிறகு நடந்த ஷூட்டிங்கிலும் மழை, கடும் குளிர், மணல் புயல் என படப்பிடிப்பு அடிக்கடி நிறுத்தப்பட்டது.
இப்படியே ஷூட்டிங் பல காரணங்களால் தடைபட்ட நிலையில், படக்குழு சென்னை திரும்புவதும் பிறகு மீண்டும் படக்குழு அஜர்பைஜான் புறப்பட்டுச் செல்வதும் தொடர்கதையாக இருந்தது. படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கும் ஏகப்பட்ட செலவை இழுத்து விட்டது. அஜீத்குமாருக்கு துபாயில் சொந்தமாக வீடு இருந்ததால், விடாமுயற்சி ஷூட்டிங் தடைபட்ட போதெல்லாம், துபாய் வீட்டுக்கு சென்று ஹாயாக ஓய்வு எடுத்தார்.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் ஒரே சமயத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர், அஜீத்குமார் நடிப்பில் விடாமுயற்சி ஆகிய படங்களை தயாரித்ததால், பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அதனால், இப்போதைக்கு விடாமுயற்சி படப்பிடிப்பை நிறுத்தி வையுங்கள், பிறகு படப்பிடிப்பை தொடரலாம் எ்ன்றும் கூறிவிட்டனர்.
அதன்பிறகு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆன அஜித்குமாருக்கு சர்ஜரி நடந்தது. அவர் பைக் டூர் சென்றார். இடையில், விடாமுயற்சி படப்பிடிப்பில், அஜீத்குமார் ஓட்டிச் சென்ற ஜீப் விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி வைரலானது. அதில் அதிர்ஷ்டவசமாக ஆரவ் உயிர் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி படத்தில் அஜீத்குமார் நடித்து வருகிறார். இன்னும் ஓரிரு தினங்களில் இந்த ஷூட்டிங்கை முடித்து விட்டு, அடுத்து விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜீத்குமார் கலந்துக்கொள்கிறார். இதற்காக மீண்டும் 40 நாட்கள் கால்ஷீட் தந்திருக்கிறார். வரும் ஜூன் 20ம் தேதி படப்பிடிப்பை, மீண்டும் அஜர்பைஜானில் துவக்குகிறார் மகிழ்திருமேனி. அஜீத்குமார், திரிஷா, ரெஜினா நடிக்கும் முக்கிய காட்சிகள், பாடல்கள், சண்டை காட்சிகள் அங்கு எடுக்கப்பட்டு, படப்பிடிப்பு நிறைவடைந்த பின், மீண்டும் ஜப்பானில் துவங்கும் குட்பேட் அக்லி படப்பிடிப்புக்கு திரும்புகிறார் அஜீத்குமார்.





