பொறியாளன் பியார் பிரேமம் காதல் எல்ஜிஎம் கசடற தபற தாராள பிரபு தனுசு ராசி அன்பர்களே போன்ற படங்களில் நடித்தவர் ஹரீஷ் கல்யாண். இளம் வளரும் நடிகராக அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. இதற்கிடையே விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றும் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் அறிமுகத்தை பெற்றார்.
இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் இந்துஜா எம்எஸ் பாஸ்கர் நடித்த பார்க்கிங் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கார் நிறுத்துவதில் 2 வீட்டுக்காரர்களிடையே ஏற்படும் ஈகோ தான் படத்தின் மையக்கரு. இந்த படத்தில் நடித்த எம்எஸ் பாஸ்கருக்கு சிறந்த குணச்சித்திர நடிகர் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பார்க்கிங் படத்துக்கு மேலும் 2 தேசிய விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஹரீஷ் கல்யாண் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படம் லப்பர் பந்து. இதுவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு சூப்பர் ஹிட் படமாக இருந்தது. ஆனால் லப்பர் பந்து படத்துக்கு பிறகு பல மாதங்களாகியும் ஹரீஷ் கல்யாண் படம் ஒன்று கூறி வெளியாகவில்லை.
இந்நிலையில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்த டீசல் படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு அக்டோபர் 17ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தை எஸ்பி சினிமாஸ் தயாரித்துள்ளது. இயக்குனர் சண்முகம் முத்துசாமி டீசல் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் அதுல்யா ரவி நாயகியாக நடித்திருக்கிறார். வினய் கருணாஸ் மற்றும் அனன்யா உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்திருக்கின்றனர்.
டீசல் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என்று நேற்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன்படி இன்று டீசல் படத்தின் டீசர் வெளியானது. அத்துடன் வருகிற அக்டோபர் 17ம் தேதி இந்த படம் ரிலீஸ் என்பதையும் படக்குழு உறுதி படுத்தியுள்ளது. பார்க்கிங் லப்பர் பந்து படங்கள் வரிசையில் டீசல் படமும் ஒரு ஹிட் படமாக அமைய அதிக வாய்ப்புள்ளது.
அதிகாரத்தையும் பண பலத்தையும் எதிர்த்து மக்கள் சந்தோஷமா இருக்கணும்னா எதிரி யாருன்னு யோசிக்காம சண்டை செய்யணும், நான் செஞ்சேன் என வசனத்தோடு டீசர் வெளியாகி உள்ளது. சண்டை காட்சிகளில் ஹரீஷ் கல்யாண் அதகளம் செய்து மிரட்டியிருக்கிறார். இந்த படம் ரசிகர்களை கவரும் ஒரு ஆக்சன் படமாக உருவாகி இருப்பதை டீசல் படம் டீசர் உறுதிப்படுத்துகிறது. அதே நேரத்தில் ஹரீஷ் கல்யாண் ஆக்சன் ஹீரோவாக அசத்தியிருப்பார் என்றும் ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.





