நடிகர் ஜெயம் ரவி இன்று தமிழ் சினிமாவில் முக்கியமான முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். சமீப காலமாக அவரது படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் பொன்னியின் செல்வன் மட்டுமே, ஜெயம் ரவிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
இந்த சூழலில் ஒரு நிச்சயமான வெற்றிப்படத்தை தந்தாக வேண்டும் என்ற முனைப்பில் தனி ஒருவன் 2 படத்தை எடுக்க, அண்ணன் மோகன் ராஜாவுக்கு ஜெயம் ரவி கால்ஷீட் கொடுத்து விட்டார். ஏனெனில் ஜெயம்ரவியின் சினிமா பயணத்தில், தனிஒருவன் படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்து, அவருக்கு மிகப்பெரிய ஒரு ஹீரோ அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது.
தனிஒருவன், ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், போகன், அடங்க மறு, நிமிர்ந்து நில் போன்ற ஒரு சில படங்களால்தான் ஜெயம் ரவி, சினிமாவில் முன்னணி நடிகராக வெற்றி பெற்றார். ஆனால் தொடர்ந்து தோல்வி படங்களாக அவருக்கு அமைந்ததால், பழைய வெற்றி படங்களை தூசு தட்டி அதன் 2ம் பாகங்களை தந்து மீண்டும் பழைய இடத்துக்கு வரும் முயற்சியில், ஜெயம் ரவி ஈடுபட்டு வருகிறார்.
முதலில் தனி ஒருவன் 2ம் பாகம், அதையடுத்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சி 2ம் பாகம் என எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தனிஒருவன் படத்தை பொருத்த வரை அந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அதில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமிதான். மிக பிரமாதமான ஒரு வில்லன் நடிப்பை அரவிந்த்சாமி தந்திருப்பார். படத்தில் ஹீரோவை விட வில்லன் நடிப்புதான் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.
ஆனால் அந்த படத்தில் கிளைமேக்ஸில் அரவிந்த் சாமி சுட்டுக்கொல்லப்பட்டு விடுவார். அதனால் தனி ஒருவன் 2ம் பாகத்தில் கதைப்படி அவர் நடிக்க முடியாது. அதனால், இந்த 2ம் பாகத்திலும் அதே போன்று வெயிட்டான ரோலில் நடிக்க நல்ல வில்லன் நடிகரை டைரக்டர் மோகன்ராஜா தேடிக்கொண்டே இருக்கிறார். இதுவரை அவர் எதிர்பார்க்கிற மாதிரியான வில்லன் நடிகர் கிடைக்கவே இல்லை.
இதற்கிடையே பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் உள்ளிட்ட சில நடிகர்களை நேரில் வரவழைத்து போட்டோ ஷூட் எடுத்து பார்த்திருக்கிறார் மோகன்ராஜா. ஆனால் அவர்கள் யாருமே அவர் நினைக்கிற அந்த கேரக்டருக்கு செட் ஆகவில்லை. அவருக்கு அந்த நடிகர்கள் திருப்தியளிக்கவில்லை. அதனால் பயங்கர அப்செட்டில் தனி ஒருவன் 2 படப்பிடிப்பை துவங்க முடியாமல் காணப்படுகிறார் மோகன் ராஜா.




