ஜனநாயகன் படம் திரைக்கு வருவதாக இருந்ததால் இந்த தை பொங்கலை தளபதி பொங்கலாக கொண்டாட விஜய் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக சென்சார் போர்டு கடைசி நேரத்தில் தந்த நெருக்கடியால் ஜனநாயகன் படம் அறிவித்த 9ம் தேதி ரிலீஸ் ஆகவில்லை. எப்படி இருப்பினும் சில தினங்கள் தாமதமாக இந்த பொங்கலுக்குள் படம் வெளியாகி விடும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட் வழக்கு சுப்ரீம் கோர்ட் வழக்கு என ஜனநாயகன் படம் ரிலீஸ் என்பது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பலத்த அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் லியோ படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் ஓடி வருகின்றன. இன்னும் சில தியேட்டர்களில் மெர்சல் படமும் திரையிடப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வெளிவராத நிலையில் ரி ரிலீஸ் படங்கள் மட்டுமின்றி புதிய படங்களும் பொங்கலுக்கு களத்தில் இறக்கப்படுகின்றன. நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் மோகன்ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்த திரௌபதி 2 சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் ஆகிய 4 புதிய படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகின்றன.
இதற்கிடையே விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தயாரிப்பாளர் எஸ் தாணு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். கடந்த 2016ம் ஆண்டில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் தெறி. நடிகைகள் சமந்தா எமி ஜாக்சன் ராதிகா இயக்குனர் மகேந்திரன் பிரபு காளிவெங்கட் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கடந்த 2016ம் ஆண்டில் தெறி படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தான் விஜய் – அட்லி கூட்டணி முதல் முறையாக இணைந்தது. அதன்பிறகு மெர்சல் பிகில் போன்ற பல வெற்றிப் படங்களை அட்லி கொடுத்தார். தெறி படம் திரைக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது இந்த படத்தை ரி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தாணு முன்வந்தார். இப்போது விஜய் நடித்த ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் திரைக்கு வராததால் வரும் 15ம் தேதி தெறி படத்தை ரி ரிலீஸ் செய்வதாக தயாரிப்பாளர் தாணு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் தெறி ரி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ள எக்ஸ்பதிவில், பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டதால் தெறி ரி ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். அதாவது தெறி ரி ரிலீஸ் செய்யப்பட்டால் புதிய படங்களுக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காது. மேலும் தளபதி ரசிகர்கள் ஜனநாயகன் படம் வராத நிலையில் அப்செட்டில் இருப்பதால் தெறி படத்தை பெரிய அளவில் கொண்டாட மாட்டார்கள் என்பதும் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.





