நடப்பாண்டு தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று தக் லைப். நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணி இணைந்ததால், இதன் ஆரம்பத்தின்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. போதாக்குறைக்கு சிலம்பரசனும் இணைந்ததால், பலரது பார்வையும் தக் லைப் பக்கம் திரும்பின.
திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, லப்பர் பந்து சஞ்சனா என பல்வேறு நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தனர். இப்படியான சூழலில் கடந்த ஐந்தாம் தேதி தக் லைப் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றுள்ளது.
முதல் பாதி நன்றாக இருந்ததாகவும் இரண்டாம் பாதி சரியில்லை என்றும் பலரும் கூறி வருகின்றனர். டெல்லியில் பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கிறார் கமல்ஹாசன். ஒரு சம்பவத்தின் போது, சிறுவயது சிம்பு மூலம் அவர் காப்பாற்றப்படுகிறார். அந்த நிகழ்வில் சிம்புவின் தங்கை காணாமல் போக, அவரை கண்டுபிடித்து தருகிறேன் என்று உறுதி அளிக்கிறார் கமல்ஹாசன்.
காலங்கள் உருண்டோட, சிம்புவும் கமலுடன் இணைந்து பெரிய கேங்ஸ்டர் ஆக வலம் வருகிறார். ஆனால் அவர்கள் கூட்டத்திற்குள்ளேயே ஒருவர் ஒருவர் செய்யும் துரோகங்கள் கமல்ஹாசனை பாதிக்க அதன் பிறகு என்ன நடந்தது என்பதைத்தான் தக் லைப் திரைப்படம் கூறுகிறது. முதல் பாதியில் நேர்த்தியாக கதையை செலுத்தி இருந்த படக்குழு, இரண்டாம் பாதியில் அதை தவற விட்டு விட்டது.
இந்த திரைப்படம் திரையரங்குகளை தாண்டி இணையத்தில், கேலி கிண்டல் அடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பலரும் த்ரிஷா கதாபாத்திரத்தை கேலி செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல், படம் வெளியாவதற்கு முன்பே ஹிட் அடித்த முத்த மழை பாடல், படத்தில் இல்லாதது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
இப்படியான சூழலில் மூன்று நாட்களில் மட்டும் இந்த திரைப்படம் முப்பது கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் 15 கோடி ரூபாய் வசூல் செய்த இந்த திரைப்படம், அடுத்த இரண்டு நாட்களில் சேர்த்து 14 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்து இருக்கிறது. வரும் நாட்களிலும் இந்த திரைப்படம் கணிசமான தொகையை ஈட்டும் என்றே கூறப்படுகிறது.





