நடிகர் கமல்ஹாசன் எப்போதுமே தொலைநோக்கு பார்வை கொண்டவர். கதை திரைக்கதையில் வசனங்களில் நடிப்பில் தொழில்நுட்பங்களில் தமிழ் சினிமாவை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்ற பெருமைக்கு சொந்தக்காரர். சினிமாவின் வளர்ச்சியை பொருத்தே அவரது செயல்பாடுகள் இருந்து வருகின்றன.
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவராக அரசியல்வாதியாக கமல்ஹாசன் பல விமர்சனங்களில் சிக்கினாலும் எதிர்மறை கருத்துகளை பலர் அவர் மீது கூறினாலும் ஒரு சினிமா கலைஞனாக அவரது உழைப்பும் பங்களிப்பும் நிச்சயமாக யாராலும் குறை சொல்ல முடியாதது. அந்தளவுக்கு சிறப்பான முறையில் சினிமாவை அவர் பல விதங்களில் மேம்படுத்தி இருக்கிறார்.
கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் உருவாகும் படங்கள் டிஜிட்டல் ரைட்ஸ் சேட்டிலைட் ரைட்ஸ் வருமானத்தை பெரிய அளவில் நம்பியிருக்கிறது. இதன்மூலமாக தயாரிப்பாளர்களுக்கு கணிசமான லாபமும் கிடைத்து வருகிறது. அதனால் ஒரு படம் உருவாகும் போது டிஜிட்டல் ரைட்ஸ் சேட்டிலைட் ரைட்ஸ் குறித்த வியாபாரமும் ஆரம்பமாகி விடுகிறது.
தமிழ் சினிமாவை பொருத்த வரை ஒரு புதிய படம் ரிலீஸாகி 4 வாரங்களில் ஓடிடி தளங்களுக்கு வந்து விடுகிறது. 60 நாட்களில் சேட்டிலைட் சேனல்களில் ரிலீஸாகி விடுகிறது. இதுதான் நடைமுறையாக உள்ளது. டிக்கெட் கட்டணம் கேண்டீன் செலவு போன்றவற்றால் 4 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் பார்த்து கொள்ளலாம் என நினைப்பதால் பல தியேட்டர்களில் புதிய படங்கள் ரிலீஸான சில தினங்களில் காற்று வாங்குகின்றன.
ஆனால் அதே நேரத்தில் இந்தியில் ஒரு படம் ரிலீஸானால் 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி தளங்களுக்கு வருகின்றன. அதே முறையில் தமிழ் சினிமாவிலும் புதிய படங்கள் 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி தளங்களுக்கு வர வேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் வணிக ரீதியாக இது ஓடிடி தளங்களுக்கு அதிக லாபம் தராது என்பதால் மறுக்கப்படுகின்றன.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் சிம்பு திரிஷா அபிராமி அசோக் செல்வன் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்த தக்லைஃப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படம் ரூ. 125 கோடிக்கு டிஜிட்டல் ரைட்ஸ் விலைக்கு விற்கப்பட்ட நிலையில் 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும். அந்த விதிமுறைப்படி தான் கமல்ஹாசன் இந்த படத்தை விற்றுள்ளார். அதனால் கமலை முன் உதாரணமாக வைத்து மற்ற படங்களும் 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி தளங்களுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.





