கலைத்தாயின் தவப்புதல்வன் நடிகர் திலகம் நடிப்பின் இலக்கணம் தாதே சாகிப் பால்கே விருது பெற்ற செவாலியே சிவாஜிகணேசனுக்கு ஒரு திரைக்கலைஞனாக பல அடையாளங்கள் இருக்கிறது. இன்று அவரது 24வது நினைவு தினமாகும். 9 வயது சிறுவனாக இருந்தபோதே வீட்டை விட்டு வெளியேறி பிறகு தனது தாயின் அனுமதியோடு நாடகங்களில் நடித்து தனது கலைப் பணியை தொடங்கியவர் நடிகர் சிவாஜி கணேசன்.
கடந்த 1946ம் ஆண்டு திராவிட கழகம் மாநாட்டை ஒட்டி அண்ணாதுரை எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் சிவாஜியாக நடித்தவர் விசி கணேசன். ஆரம்பத்தில் அவரது பெயர் கணேசன்தான். இந்த நாடகத்தில் அவரது நடிப்பை கண்டு வியந்த பெரியார் ஈவே ராமசாமி, இன்று முதல் நீ வெறும் கணேசன் அல்ல, சிவாஜி கணேசன் என்று கூற அதுவே நிலைத்து சிவாஜி கணேசன் என புகழ் பெற்றார்.
கடந்த 1952ம் ஆண்டு நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பில் பராசக்தி என்ற படத்தில் குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து சினிமாவில் நாயகனாக சிவாஜி கணேசன் அறிமுகமானார். இந்த படத்தில் நாயகனாக அவர் நடிக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், படத்தின் தயாரிப்பாளரான பிஏ பெருமாள் சிவாஜியின் அபார நடிப்பாற்றலில் நம்பிக்கை கொண்டு அந்த படத்தில் அவரை நாயனாக்கினார். பராசக்தி படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சரித்திர கால படங்கள் புராண கால படங்கள் மற்றும் சமூக படங்கள் என எந்த வகை படங்களாக இருந்தாலும் அந்தந்த படங்களில் வரும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து அதற்கேற்ற உடல் மொழி வசன உச்சரிப்பு நடை உடை பாவனை ஆடை அலங்காரம் என எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி அவற்றை தத்ரூபமாக நடிப்பில் வெளிப்படுத்தி ஒரு தலைசிறந்த நடிகராக கலை மேதையாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
குறிப்பாக கட்டபொம்மன் கர்ணன் அரிச்சந்திரா ராஜராஜசோழன் போன்ற படங்களிலும், வ உ சிதம்பரம் பிள்ளை மகாகவி பாரதியார் பகத்சிங் கொடிகாத்த குமரன் போன்ற கேரக்டர்களிலும் சிவன் ராமன் கிருஷ்ணன் நாரதர் என இன்னும் பல கேரக்டர்களிலும் ஏழை பங்காளன் ஜமீன்தார் ரிக்சாக்காரன் கிராமவாசி போலீஸ் அதிகாரி நீதிபதி டாக்டர் என நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏற்காத கதாபாத்திரங்களை இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடிப்பின் அகராதியாக வாழ்ந்து மறைந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றால் அது மிகையல்ல.
சிவாஜி கணேசன் முதன்முறையாக நாடகத்தில் நடித்த கதாபாத்திரமே பெண் வேடம் தான். இராமாயணம் நாடகத்தில் சீதை வேடம் ஏற்று சிவாஜி கணேசன் நடித்திருந்தார். அதன் பிறகு பரதன் சூர்ப்பனகை இந்திரஜித் போன்ற வேடங்களிலும் அவர் நடித்திருக்கிறார். சினிமா உலகில் நடிப்பு பல்கலைக்கழகம் என்று போற்றப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினமான இன்று சினிமா ரசிகர்கள் அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.





