தமிழ் சினிமாவில் ரசிகர்களின் அதிக கவனம் பெற்ற ஒரு நடிகராக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை நடிகராக இருந்து பிறகு முன்னணி நடிகராக மாறியவர். நாயகனாக மட்டுமின்றி வில்லன் குணச்சித்திரம் என எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் பிசிறு தட்டாமல் நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த கலைஞனாக இருந்து வருகிறார்.
கடந்தாண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் புரிந்தது. குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கிய இந்த படம் சீனாவிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மாபெரும் எண்ணிக்கையில் பார்வையாளர்களை கடந்தது.
அதன்பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் ஆகாசவீரன் என்ற படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். ஏஸ் என்ற அவரது மற்றொரு படமும் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இந்த படங்கள் அனைத்துமே அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு பான் இந்தியா படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் நடிகை தபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆனால் விஜய் சேதுபதிக்கு தபு ஜோடியாக இல்லை. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஏற்கனவே விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் 96 படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இப்போது 96 படத்தின் 2ம் பாகத்தில் இருவரும் மீண்டும் நடிக்க உள்ளனர். இந்த படம் மெல்லிய காதல் உணர்வுகளை சொன்ன படமாகும். அதனால் 2ம் பாகமும் ஒரு காதல் படமாக இளம் வயதினரை கவரும் ஒரு ஜானரில்தான் இந்த படத்தின் கதை உருவாகிறது.
அதே நேரத்தில் பூரி ஜெகன்னாத் தன்னுடைய கமர்ஷியல் பான் இந்தியா படத்தில் விஜய் சேதுபதிக்கு நடிகை திரிஷா நடித்தால், 96 படத்தின் 2ம் பாகமும் இந்த படமும் ஒரே நேரத்தில் ரிலீஸானால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற பெரிய குழப்பத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது 96 படத்தின் 2ம் பாகத்தையும் பாதிக்கும் சூழலையும் உருவாக்கும் என்பதால் விஜய் சேதுபதிக்கு திரிஷா இந்த படத்தில் ஜோடியாக நடிப்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.





