இந்த முறை பொங்கலுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன்தான். ஆனால் சென்சார் பிரச்னை காரணமாக அந்த படம் திரைக்கு வரவில்லை. அதே நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் பெரிய அளவில் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்களின் ஆதரவு அந்த படத்துக்கு கிடைக்கவில்லை. 100 கோடி ரூபாய் வசூலை கடந்தாலும் பராசக்தி படம் விமர்சன ரீதியாக தோல்வி படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட கதைக்களத்தில் காதல் காட்சிகளும் வந்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
இந்த சூழலில் நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் படமும் பொங்கலுக்கு வெளியானது. எம்ஜிஆரை மையப்படுத்தி எடுத்த இந்த படமும் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கார்த்தி நடித்த மொக்கை படம் ஜப்பான் போல 10 படத்துக்கு இது சமமானது என்று படம் பார்த்த ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்தனர்.
பொங்கலுக்கு வெளியான 2 படங்களுமே சரியான வரவேற்பை பெறாத நிலையில் கடந்த 15ம் தேதி வெளியான படம் தலைவர் தம்பி தலைமையில். நடிகர் ஜீவா நாயகனாக நடித்து மலையாள இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் ஜீவாவுக்கு கோ படத்துக்கு பிறகு இந்த படம் ஒரு சூப்பர் கம்பேக் தந்துள்ளது.
வித்யாசமான ஒரு கதைக்களத்தில் இந்த படத்தின் திரைக்கதை இருக்கிறது. தம்பி ராமையா இளவரசு பிராத்தனா ஜென்சன் திவாகர் போன்றவர்களின் அற்புதமான நடிப்பு படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக உள்ளது. எளிமையான திரைக்கதையில் காமெடி கலந்து சொன்ன விதம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் கார்த்தி படங்கள் காரணமாக டிடிடி படத்துக்கு பெரிய அளவில் திரைகள் கிடைக்காத நிலையிலும் இந்த படத்துக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு தந்து வருகின்றனர். அதனால் தலைவர் தம்பி தலைமையில் படம் இதுவரை 22 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது. ஆனால் இந்த படம் மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.





