தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வரும் விஜய் கடந்த 2024ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவக்கினார். பிறகு நடந்த ஒரு விழாவில் தனது கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார். விஜய் அறிமுகப்படுத்திய கட்சிக் கொடியில் நடுவில் வாகை மலரும் கொடியின் இருபுறமும் இரண்டு யானைகள் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது.
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் யானை உருவம் பொறிக்கப்பட்டுள்ள நிலையில், அதேபோல் நடிகர் விஜயின் கட்சி கொடியிலும் யானை உருவங்கள் இருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதனால் தவெக கட்சிக் கொடியில் யானை உருவத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவெக கட்சியின் தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோரை பதில் அளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தவெக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தவெக கட்சி கொடிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.
கட்சியின் கொள்கை கோட்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தவெக கட்சிக்கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கலாசாரம் வரலாற்று பெருமை சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் தனித்துவத்துடன் தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொடியின் மத்தியில் வெற்றியின் அடையாளமாக வாகை மலர் வரையப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டம் மற்றும் தேர்தல் உரிமைகளை மீறவில்லை. வாக்காளர்களை குழப்பும் வகையில் தவெக கொடி உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வழக்கறிஞர் ஆனந்தன் ஆஜராகி பேசினார். எங்கள் கட்சி கொடியின் யானை உருவம் தவெக கட்சிக் கொடியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று பிற கட்சிகளின் கொடியில் உள்ள உருவங்களை மாற்றுக் கட்சிகள் பயன்படுத்த அக்கட்சிகள் அனுமதிக்குமா? அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு தேர்தல் கமிஷன் யானை சின்னத்தை வழங்கி உள்ளது. எங்கள் கட்சிக் கொடியில் யானை உருவம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தவெக கொடியில் யானை உருவத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை வருகிற ஜூலை 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.





