உதயநிதி ஸ்டாலின் தனது கடைசி திரைப்படமாக “மாமன்னன்” இருக்கப்போகிறது என்பதால் வடிவேலு, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை அணுகி இந்த புராஜெக்டில் இணைத்துக்கொண்டார். உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இத்திரைப்படத்தில் வடிவேலு நடிக்க சம்மதித்தார் என்றே சிலர் கூறி வருகின்றனர். ஆனால் உதயநிதி ஸ்டாலின் வடிவேலுவை அணுகியது இது முதல் முறை இல்லை. இதற்கு முன்பு, பல வருடங்களுக்கு முன்பே வடிவேலுவை தனது படத்தில் நடிக்க அணுகியிருக்கிறார். ஆம்!

உதயநிதி ஸ்டாலின் தொடக்கத்தில் ஒரு தயாரிப்பாளராக மட்டுமே தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார். அவர் தயாரித்த முதல் திரைப்படம் விஜய்யின் “குருவி”. இத்திரைப்படத்தில் விஜய்-விவேக்கின் காமெடி காம்போ மிகவும் ரசிக்கப்பட்டது. இத்திரைப்படம் படுதோல்வியடைந்திருந்தாலும் இதில் இடம்பெற்ற பல காமெடி காட்சிகள் இப்போதும் பிரபலமானவை.
ஆனால் “குருவி” திரைப்படத்தில் முதலில் உதயநிதி ஸ்டாலின் வடிவேலுவை நடிக்க வைக்கலாம் என்று அவரை அணுகியிருக்கிறார். ஆனால் “குருவி” படத்தின் கதையை கேட்ட வடிவேலு, “இதில் எனக்கு வெயிட்டான ரோல் இல்லை. ஆதலால் இதில் நடிக்க முடியாது” என்று கூறிவிட்டாராம். இதனை தொடர்ந்துதான் விவேக் அந்த ரோலில் நடித்திருக்கிறார்.

எனினும் உதயநிதியின் கடைசி திரைப்படம் என்பதால், “மாமன்னன்” திரைப்படத்தில் வடிவேலு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கனவே வடிவேலு 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. அதே போல் வடிவேலுவும் சில வருடங்கள் சினிமாவில் இருந்து காணாமல் போனார். திமுகவுடனான பழைய நட்பு காரணமாக கூட வடிவேலு “மாமன்னன்” படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கலாம் என்றும் பலர் கூறுகின்றனர்.





