நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மதராஸி. கடந்த 2023ம் ஆண்டிலேயே இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்த நிலையில், 2024ம் ஆண்டிலேயே இந்த படம் திரைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் படப்பிடிப்பு நடந்துக்கொண்டு இருக்கிறது.
இதற்கு காரணம், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மதராஸி படப்பிடிப்பில் இருந்த போது, இந்தியில் நடிகர் சல்மான்கான் நடிப்பில் சிக்கந்தர் என்ற படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பு வந்தது. சல்மான்கான் அழைப்பு வந்ததால் மதராஸி படத்தை அப்படியே பாதியில் போட்டுவிட்டு இந்திக்கு சென்றுவிட்டார்.
அதே நேரத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அமரன் படத்தில் நடிக்க வேண்டி இருந்ததால், சிவகார்த்திகேயனும் அமரன் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தினார். அதனால் மதராஸி படத்துக்கு முன்னதாகவே கடந்த ஆண்டில் தீபாவளிக்கு அமரன் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.
ஆனால் இந்தியில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த சிக்கந்தா் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது இயக்குனர் ஏஆர் முருகதாஸ் படம்தான் என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் நம்ப மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு படம் மிக மோசமாக வந்திருக்கிறது.
இந்தியில் இருந்து தமிழுக்கு திரும்பிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ், மதராஸி படப்பிடிப்பை முடிக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார். இப்போது பராசக்தி படப்பிடிப்பில் இருந்துவரும் சிவகார்த்திகேயன், மதராஸி படத்தில் இன்னும் 15 நாட்கள் மட்டுமே நடிக்கவேண்டிய காட்சிகள் மீதமுள்ளது. 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.
இந்த சூழலில் வருகிற ஜூலை மாதம் மதராஸி படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் இப்போதைய லேட்டஸ்ட் தகவலின்படி வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி மிலாடி நபி பண்டிகை நேரத்தில் மதராஸி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டள்ளதாக தகவல் கசிந்துள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.





