நடிகர் தனுஷ் இப்போது ஓம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் 16 ரிலீஸ் என்று சொல்லப்பட்ட நிலையில் அக்டோபர் 15ம் தேதி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் ரிலீஸ் காரணமாகவும், நடிகர் சூர்யா நடித்த சீன் படம் தீபாவளிக்கு வருவதாலும் அந்த படங்களுக்கு வழிவிட்டு ஓம் படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் டி 56 படத்தில் துவக்க விழா பூஜை சிவகங்கையில் உள்ள பிரபலமான கருப்பண்ணசாமி கோவிலில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் வடிவேலு கலந்துக்கொண்டு இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்கிற தகவலை உறுதிப்படுத்தினார்.
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடிகர் வடிவேலு இணைந்து நடித்திருக்கிறார். ஆனால் இதுவரை நடிகர் தனுஷ் உடன் அவர் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. கடந்த 2011ம் ஆண்டில் மாப்பிள்ளை என்ற தனுஷ் நடித்த படத்தில் அசால்ட் ஆறுமுகம் என்ற கேரக்டரில் விவேக் நடித்திருப்பார். அந்த காமெடி காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
ஆனால் இந்த அசால்ட் ஆறுமுகம் கேரக்டரில் முதலில் நடித்தது நடிகர் வடிவேலுதான். சில நாட்கள் அவர் படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட நிலையில் பிறகு அவர் விலகி விட்டார். அதன்பிறகு அந்த கேரக்டரில் விவேக் நடித்தார். அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் உடன் டி 56 படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார்.
இந்த விழாவில் நடிகர் வடிவேலு பேசியதாவது, டி 56 படத்தில் தனுஷ் உடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக ஏன் இருவரும் இணைந்து நடிக்கவில்லை? என்று நீங்கள் கேட்கலாம். எங்கள் ஃபீல்டில் இரண்டு பேர் பிரிவதற்கு அத்தனை வேலைகளையும் பார்ப்பார்கள். தீப்பொறியை வைத்து கொளுத்தி போடுவார்கள்.
எங்களுக்கு இடையே தீப்பந்தத்தையே கொளுத்தி போட்டு விட்டார்கள். இந்த படம் அரசியல் சார்ந்த படமாக இருக்காது. வித்தியாசமான படம். கதையைக் கேட்ட பிறகு பெருமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இந்த படம் மிகப் பிரமாண்டமான படம். மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று நடிகர் வடிவேலு அந்த விழாவில் மகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.





