தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக இருந்தவர் டெல்லி கணேஷ். குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு சிறந்த நடிகர். 80 வயதான அவர், நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் டெல்லி கணேஷ் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் வடிவேலுவுடன் மிடில் கிளாஸ் மாதவன், சீனாதானா 007, சங்கமம் உள்ளிட்ட சில படங்களில் டெல்லி கணேஷ் நடித்திருக்கிறார். அவ்வை சண்முகி, மைக்கேல் மதன காமராஜன், சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி, சிந்து பைரவி போன்ற படங்களில் டெல்லி கணேஷ் நடிப்பு தனித்துவம் பெற்றதாக இருந்தது.
இந்நிலையில் டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் வடிவேல் இரங்கல் தெரிவித்துள்ளார். அப்போது ஒரு பழைய சம்பவத்தை நடிகர் வடிவேலு நினைவுகூர்ந்து தன் அஞ்சலியை செலுத்தியுள்ளார். ரஞ்சித் பிரியாராமன் நடித்த படம் நேசம் புதுசு. இதில் ஒரு காட்சியில் பஞ்சாயத்து நடக்கும். அப்போது பொண்ணை கையப் புடிச்சு இழுத்தியா என்ற காமெடி பலரையும் ரசிக்க வைத்தது.
நேசம் புதுசு படத்தில் வரும் பொண்ண கைய புடிச்சு இழுத்தியா என்ற காமெடிக்கு அண்ணன் டெல்லி கணேஷ்தான் காரணம். ஒருநாள் அவரை நான் நேரில் சந்தித்தபோது, எங்கள் ஊரில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அவர் கூறினார்.
அதன்பிறகு கொஞ்ச நாள் கழித்து, நான் அந்த காட்சியை நேசம் புதுசு படத்தில் பயன்படுத்தலாம் என நினைத்து அவருக்கு போன் செய்து அனுமதி கேட்டேன். அப்போது அவர் என்னை, இதெல்லாம் என்னிடம் கேட்க வேண்டுமா என்று அன்புடன் கண்டித்து விட்டு அதற்கு அனுமதி கொடுத்தார். அவர் மட்டும் அனுமதி கொடுக்காவிட்டால் இந்த நேரத்தில் அந்த பிரபலமான காமெடியே இருந்திருக்காது என்று கூறியிருக்கிறார்.
இந்த நேரத்தில் அவரை நினைவு கூர பெருமையுடன் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறிய வடிவேலு, எனக்குப் பிடித்த எத்தனையோ நடிகர்களில் அண்ணன் டெல்லி கணேஷூம் ஒருவர். யதார்த்தமான அவரது நடிப்பையும் அன்பையும் நான் இழந்துவிட்டேன் என்று வடிவேலு வருத்தமுடன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். டெல்லி கணேஷ் சமீப காலமாக, அவர் இறப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மறுத்த நிலையில், அவரது மறைவு தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது.





