தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
தளபதி 69 படத்தில் விஜய் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தை தொடர்ந்து 2வது முறையாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன் உள்ளிட்டோர் நடிப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.
கடந்த மாதம் 5ம் தேதி துவங்கிய தளபதி 69 படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடந்து வருகிறது. தொடர்ந்து 3 மாதங்களுக்குள் படப்பிடிப்பை முடித்துவிடுமாறு ஏற்கனவே விஜய், இயக்குனர் எச் வினோத்துக்கு அறிவுறுத்தி உள்ளார். ஏனெனில் சட்டசபை தேர்தல் பணிகளில் அவர் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் இந்த படத்தை விரைவில் முடித்துக்கொள்ள விரும்புகிறார்.
இந்த படம் வருகிற அக்டோபரில் திரைக்கு வரும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் இப்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பான் இந்தியா படமாக வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று ரிஷப் ஷெட்டி நடித்த காந்தாரா சாப்டர் 1 படம் ரிலீஸாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அந்த படம் ரிலீஸாகும் காலகட்டத்தில் விஜய் படம் வெளியானால் இரண்டு படங்களுக்குமே தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். மேலும் படங்களின் வசூலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி காந்தாரா சாப்டர் 1 படத்துக்கு சகல தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
அதனால் தளபதி 69 படத்தை வருகிற 2025ம் ஆண்டில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்துவிடலாம் என்ற முடிவுக்கு படத்தின் இயக்குனர் எச் வினோத், நடிகர் விஜய் மற்றும் படத்தை தயாரிக்கும் கேவிஎன் புரடக்சன்ஸ் முடிவு செய்துள்ளது. தற்போது தளபதி 69 படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்துக்கொண்டு நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு அவர் இந்த படத்தில் நடிப்பதும், ஏற்கனவே விஜயுடன் சர்கார் படத்தில் வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





