தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இப்போது காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் 116 என்ற எம்எல்ஏக்கள் என்ற நிலையில் உள்ளார். இன்னும் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் அவர் ஆட்சியமைத்து தமிழக முதல்வராக பதவியேற்க முடியும் என்கிற ஒரு சூழல் அரசியல் களத்தில் நிலவுகிறது. ஆனால் கடைசி நேரத்தில் 2 எம்எல்ஏ பற்றாக்குறையால் அதில் இழுபறி நீடிக்கிறது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வசம் 2 தொகுதிகள் உள்ள நிலையில் அவர்கள் ஆதரவு தர மறுத்துவிட்டனர். அன்றும் இன்றும் என்றும் நாங்கள் திமுக கூட்டணியில் மட்டுமே தொடர்வோம் என்று அந்த கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் திட்டவட்டமாக கூறிவிட்டார். இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் தவெக 2 சீட் ஆதரவு கேட்டுள்ளது.
ஆனால் 3 நாட்களாக இதுகுறித்து முக்கிய முடிவை சொல்லாமல் தொல் திருமாவளவன் தவெக கட்சியை விரக்தியடைய செய்து வருகிறார். நேற்றிரவு 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது ஆதரவை பகிரங்கமாக அறிவித்த நிலையில் திருமாவளவன் மட்டும் நாளை காலை அதாவது இன்று காலை அறிவிப்பதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை அவர் அறிவிக்கவில்லை.
மேலும் இன்று மாலை 4 மணிக்கு தவெக கட்சிக்கு ஆதரவு குறித்த தங்களது நிலைப்பாட்டை திருமாவளவன் அறிவிப்பார் என்று அக்கட்சி நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர். இப்படி கடைசி நேரத்தில் திருமாவளவன் தவெக கட்சிக்கு ஆதரவு தராமல் இழுத்தடிக்க காரணம் குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
அதன்படி 2 எம்எல்ஏக்கள் ஆதரவு தர உள்ள திருமாவளவன் அந்த 2 எம்எல்ஏக்களும் அமைச்சர் பதவி தரவேண்டும். மேலும் விஜய் ராஜினாமா செய்ய உள்ள திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும். பிறகு அவர் துணை முதல்வராக ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கு தவெக உடன்படாவிட்டால் 2 ஆண்டுகள் திருமாவளவன் தமிழக முதல்வராக இருக்க வேண்டும் என்கிற நிபந்தனைகள் உள்ளன.
இப்படிப்பட்ட நெருக்கடியான நிபந்தனைகளுடன் காத்திருக்கும் விசிக அதனால்தான் விஜய்க்கு உடனே ஆதரவு தெரிவிக்காமல் தாமதித்து இழுத்தடித்து வருகிறது. ஆனால் 108 தொகுதிகளில் தனித்து நின்று அபார வெற்றி பெற்ற விஜய், 2 எம்எல்ஏக்களை வைத்துள்ள விசிக கட்சியின் இந்த நிபந்தனைகளுக்கு எல்லாம் ஓகே சொல்லவே மாட்டார். தவெக மீண்டும் தேர்தலை சந்திக்க தயார் என்றுதான் சொல்வார் என்று தவெகவினர் கூறுகின்றனர்.





