தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை கௌதமி. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜுன், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர். கௌதமி இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த காலகட்டத்தில் ஏகப்பட்ட படங்களில் கவுதமி நடித்தார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடிகை கௌதமி அதிகமாக நடித்து பிரபலமானார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு, குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். ஒருகட்டத்துக்கு பிறகு கணவரை பிரிந்து, தனது மகள் சுப்புலட்சுமி உடன் கௌதமி தனியாக வாழ்ந்தார்.
அப்போது கௌதமிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அப்போது நடிகை கௌதமியை நடிகர் கமல்ஹாசன் கவனித்துக் கொண்டார். ஏற்கனவே தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட சில படங்களில் கமலும் கௌதமியும் இணைந்து நடித்த நிலையில், அவர்களுக்குள் நட்பு இருந்தது. இந்த சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன், தனது மனைவி சரிகாவை பிரிந்திருந்த நிலையில், கவுதமியுடன் ஏற்பட்ட நட்பு நெருக்கமாக மாறியது.
புற்றுநோய் குணமடைந்த நிலையில் கௌதமியும், கமலும் திருமணம் செய்து கொள்ளாமல், தாலி கட்டிக் கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்தனர். 17 ஆண்டுகள் வரை அவர்களது லிவிங் டு ரிலேசன்ஷிப் வாழ்க்கை நீடித்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு நடிகை கௌதமி தனது மகளுடன் தனியாக இருந்தார். அப்போது பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட நடிகை கௌதமி, தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்றார்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நடிகை கௌதமிக்கு சொந்தமான 1.50 ஏக்கர் நிலத்தை விற்பதாக கூறி காரைக்குடியை சேர்ந்த சினிமா நிதியாளர் அழகப்பன் ரூ. 3.1 கோடிக்கு விற்று மோசடி செய்ததாக தெரிகிறது. அவரிடமிருந்து தனது பணத்தை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் எஸ்பியிடம் கௌதமி புகார் அளித்தார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது
இதில் பாஜக கட்சி சார்ந்த சிலரே தனக்கு துரோகம் செய்ததால் கெளதமி பாஜக கட்சியை விட்டும் வெளியேறினார். நேற்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு நடிகை கௌதமி நீதிபதி முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அழகப்பனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் கௌதமி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். பின்னர் கௌதமி செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன், இதை விட்டுவிட மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார்.





