தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் ரீதியில் இந்த திரைப்படம் சாதனை படைத்தாலும், இதற்கான சர்ச்சை என்பது அடுத்தடுத்து அரங்கேறிய வண்ணமே இருந்தது. முதலில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக இருந்து பின்னர் ரத்து செய்யப்பட்டது.
அடுத்ததாக லியோ படத்தின் டிரைலர் சென்னை ரோகினி திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது ரசிகர்கள் இருக்கைகளை அடித்து நொறுக்கியது இணையத்தில் வைரலானது. டிரைலரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தையும் பேசு பொருளாக பின்னர் அது நீக்கப்பட்டது.
கடைசியாக லியோ திரைப்படம் வெளியான முறையில் அது கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் படத்தின் வசூல், ஒரே வாரத்தில் 461 கோடி ரூபாய் ஈட்டி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிக்க அதை சேர திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்தனர். இப்படியான சூழலில் நாளை மறுநாள் லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. அதில் தளபதியின் பேச்சைக் கேட்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
இப்படியான சூழ்நிலையில் தனது அடுத்த திரைப்படத்திலும் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படத்தில், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், அஜ்மல், பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
மாநாடு திரைப்படத்தில் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது போல, இதில் டைம் டிராவல் கதையை வெங்கட் பிரபு எடுக்க உள்ளாராம். தந்தை மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் விஜய் நடிக்க, அதில் ஒரு விஜய்க்கு பத்திரிக்கையாளர் வேடமாம். முதலில் இதற்கான பாடலை வெங்கட் பிரபு படமாக்கினார். மதன் கார்த்தி வரிகளில் இந்த பாடல் உருவானது. இதனை விஜயை பாடி இருப்பதாகவும் தகவல் வெளியானது.
தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தாய்லாந்து செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது நடிகர் சந்தானத்தை இதில் நடிக்க வைக்க வெங்கட் பிரபு விரும்பினாராம். ஆனால் தொடர் படங்களை கையில் வைத்திருப்பதால் சந்தானத்தால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். இந்த நிலையில் அவருக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தை வெங்கட் பிரபு தேடி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





