நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். Greatest Of All Time என்பதை சுருக்கியே கோட் என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை விஜயின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், மைக் மோகன், அஜ்மல், வைபவ் என ஏராளமான நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.
தாய்லாந்து துருக்கி என பல்வேறு நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி மற்றும் சென்னை போரூரிலும் இதன் காட்சிகளை வெங்கட் பிரபு படம் ஆக்கினார். இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இதில் ஒரு பாடலை விஜய் பாடி இருப்பதாக அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதற்கான வரிகளை வெங்கட் பிரபுவின் தந்தை ஆன கங்கை அமரன் எழுதியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் திரிஷாவும் நடித்திருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. அவர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. விஜய்க்கு அங்கும் பெரும்பாலான ரசிகர்கள் இருப்பதால் நாள்தோறும் அது தொடர்பான வீடியோ வெளியாகி வருகிறது. டைம் ட்ராவல் வாட்ஸ் அப்பை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுவதும், இதில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதும் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.
இந்த நிலையில் தற்போது ஒரு விஜயை வயது குறைந்த இளைஞராக காட்டுவதற்கான வி எஃப் எக்ஸ் பணிகள் சூடு பிடித்துள்ளன. இதற்காக மொத்தம் ஆறு நிறுவனங்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரம் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக ரஷ்யா செல்ல திட்டமிட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு. அங்கு மீதமுள்ள படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று சூட்டிங் முடியும் என தகவல் வெளியாகி இருக்கிறது.





