இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய படங்களில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாக தான் விடுதலை 2 படமும் இருக்கிறது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், இன்னும் ஷூட்டிங் நிறைவடையவில்லை. ஆறு மாதங்களில் வர வேண்டிய படம், 18 மாதங்களாகியும் இன்னும் படப்பிடிப்பிலேயே இருக்கிறது.
இந்த படத்தில் ஹீரோவாக நடித்த காமெடி நடிகர் சூரி, விடுதலை படம் கொடுத்த அபரிமிதமான வெற்றியால், இப்போது தமிழ் சினிமாவில் அவரும் ஒரு முக்கிய ஹீரோ நடிகராக மாறிவிட்டார். அவர் நடிப்பில் வெளிவந்த கருடன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தொடர்ந்து, கொட்டுக்காளி என்ற படம் அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கிறது.
விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்காசி, தேனி மாவட்டம் மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இப்போது சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் நடந்து வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன், விடுதலை 2 படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இன்னும் 23 நாட்களில் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என்று கூறப்படுகிறது.
விடாமுயற்சி படத்தையும், விடுதலை 2 படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் கிண்டலடிக்கும் அளவுக்கு இந்த 2 படங்களும் படப்பிடிப்பும் பல மாதங்களாக இழுத்துக்கொண்டே போகிறது. விடுதலை, விடாமுயற்சி என பாசிட்டிவ் ஆன டைட்டில்களை கொண்ட இந்த படங்கள், இப்படி ஒரு எதிர்மறையான நிலையில் இருப்பதையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வருகிற தீபாவளிக்கு விடுதலை 2 படத்தை எப்படியும் ரிலீஸ் செய்துவிடுவது என்ற முடிவுக்கு அந்த படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனர் வெற்றிமாறனும் முடிவு செய்துவிட்ட நிலையில், வரும் 23 நாட்களிலும் இரவு பகல் பாராமல் முழுமையாக படப்பிடிப்பை முடித்து விடுவது என பம்பரமாக சுழன்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
படப்பிடிப்பை முடித்த அடுத்த சில தினங்களில் இயக்குனர் வெற்றிமாறன், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவருடன் நடிகர் விஜய் சேதுபதியும் செல்ல இருக்கிறார். விடுதலை 2 படத்தில் நிறைய பிளாஸ்பேக் காட்சிகள் வருகின்றன. அதில் இளமையான தோற்றத்தில் டீஏஜிங் தொழில்நுட்பத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். எனவே, அதற்கான விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகளுக்காக இருவரும் அமெரிக்கா செல்ல உள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.





