ஒரு படைப்பாளி, தன்னை வெளிப்படுத்துவதன் அடையாளமாக தன் படைப்புகளில் அதை குறியீடாக காட்டுவார். அதுதான் அந்த கலைஞனின் லட்சியமாக, நோக்கமாக இருக்கும். அதையே அவரது படைப்புகளும் சொல்லும். அப்படிதான் பாலுமகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம், பாரதிராஜா போன்றவர்களின் படைப்புகள் இருந்தன. அந்த வரிசையில் ஒருவராக இப்போது தமிழ் சினிமாவில் வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன்.
பணம், புகழை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ள இயக்குனர்களுக்கு மத்தியில், வெற்றிமாறன் போன்றவர்கள் தன் படங்களால் இந்த சமுதாயத்துக்கு ஏதேனும் நல்ல சிந்தனைகளை, விழிப்புணர்வு தரும் உணர்வுகளை ஏற்படுத்தும் படங்களை தந்து வருகின்றனர். அதனால் அத்தகைய படைப்புகள் காலம் கடந்து நிற்கின்றன.
ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ் போன்ற ஜனரஞ்சக இயக்குனர்களின் படங்களில் நடிக்க காரணம், கமர்ஷியல் ரீதியாக அவர்களது படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே. அவர்களை பொருத்த வரை, மக்களின் சில மணி நேரம் குஷிப்படுத்தி, அவர்களிடம் இருந்து அந்த சந்தோஷத்துக்கான கட்டணமாக பணத்தை வசூலிப்பதுதான் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
தனது படங்களில் மட்டுமல்ல, தனது மேடை பேச்சுகளிலும் நல்ல கருத்தாழம் மிக்க எண்ணங்களை வெளிப்படுத்துபவர் வெற்றிமாறன். பல திரைக்கலைஞர்களின் நிஜமும், நிழலும் வேறுவேறாக தான் இருக்கும். ரசிகர்கள்தான் என் உயிர், என் வாழ்க்கையே அவர்களால்தான் என மேடையில் கூறும் சில நடிகர்கள், வீடு தேடி வரும் ரசிகர்களை அடித்து விரட்டாத குறையாக வெளியேற்றி விடுவார்கள்.
இயக்குனர் வெற்றிமாறனிடம் பல ஆண்டுகளாக புரடக்சன் மேனேஜராக பணிபுரிந்து வருபவர் சொக்கலிங்கம். வெற்றிமாறனின் மரியாதைக்குரிய நபராக பணிசெய்தவர். திரைத்துறையில் நீண்டகாலம் அனுபவம் பெற்ற சொக்கலிங்கம், ஒரு படத்தை தயாரிக்க முயற்சித்து இருக்கிறார். எனினும் வியாபார ரீதியான வெற்றிக்கு, இன்னொரு தயாரிப்பு நிறுவனத்தை தேடி இருக்கிறார். கடைசி வரை நல்ல நிறுவனம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த வெற்றிமாறன், சொக்கலிங்கத்தை அழைத்து நம்முடைய தயாரிப்பு நிறுவனமே இருக்கும் போது, எதற்காக வேறு தயாரிப்பு நிறுவனத்தை தேடி அலைகிறீர்கள். என்னுடைய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து உங்கள் படத்தை தயாரியுங்கள் என, தானாக முன்வந்து உதவியிருக்கிறார். அவர் தயாரிக்கும் மாஸ்க் என்ற படத்தில்தான் கவின், ஆண்ட்ரியா நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறனின் இந்த செயலை, தமிழ் சினிமாவினர் பாராட்டி வருகின்றனர்.





