தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக நல்ல படங்களை தந்து வருபவர் இயக்குனர் ராம். ஜீவா அஞ்சலி நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக ராம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தங்க மீன்கள் பேரன்பு தரமணி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் ராம், சவரக்கத்தி என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் இயக்குனர் மிஷ்கின் நடித்திருந்தார். காமெடி பேமிலி டிராமாவாக இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ராமின் மனைவியாக பூர்ணா நடித்திருந்தார். மிக இயல்பான ஒரு கேரக்டரில் ராம் நடிப்பு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
இந்நிலையில் இயக்குனர் ராம் பறந்து போ என்ற படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். மிர்சி சிவா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் அஞ்சலி கிரேஸ் ஆண்டனி அஜூ வர்க்கீஸ் உள்ளிட்டோர் பல முக்கிய கேரக்டர்களை நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசை தந்துள்ளார். இந்த படத்தின் கதைக்களம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று இருக்கிறது.
பிடிவாதமான பள்ளி மாணவன், பணத்தின் மீது அதிக ஆசை கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த ரோடு டிராமாவாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது. பறந்துபோ திரைப்படம் ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் கடந்த பிப்ரவரி மாதம் திரையிடப்பட்டு அங்கு நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பறந்து போ படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து வெற்றிமாறன் கூறியதாவது, ஒரு தந்தையாக இந்த படம் என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. தமிழில் ராமுடைய படங்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான். இந்த படம் அவருடைய கம்போர்ட் ஜோனில் இருந்து விலகி எடுக்கப்பட்ட ஜாலியான படமாக உள்ளது. அவருடைய படங்கள் பொதுவாகவே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த படம் எனக்கு ரொம்பவும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
பறந்துபோ படத்தில் வரும் தந்தை கதாபாத்திரத்தோடு என்னையும் கொண்டு போய்விட்டார். அந்த கேரக்டரை ஏற்று நடித்த சிவா சிரமம் இல்லாமல் நடித்திருக்கிறார். நிறைய இடங்களில் அவங்க சொல்றபடி இருந்திருக்கலாமோ எனவும் யோசிக்க வைக்கிறது. இந்த படம் எல்லோருக்கும் நெருக்கமான படமாக இருக்கும். படம் பார்த்ததிலிருந்து என்னுடைய குழந்தைகளுடன் நான் எப்படி இருக்கிறேன், அதில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று யோசித்து வருகிறேன். அப்படி யோசிக்க வைத்த ராமுக்கும் பறந்து போ படக் குழுவுக்கும் நன்றி என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.





