தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு படைப்பாளியாக இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். ரசிகர்களின் மனம் கவர்ந்த வெற்றிமாறன், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பாடம் கற்றவர். பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஆடுகளம், விசாரணை அசுரன், வடசென்னை, விடுதலை உள்ளிட்ட வெற்றிப் படங்களை தந்தார்.
கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வெளியான படம் விடுதலை. காமெடி நடிகராக இருந்த சூரியை நாயகனாக்கி இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கி இருந்தார். வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். சேத்தன், கௌதம் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் மிக சிறப்பாக நடித்திருந்தனர்.
நாயகியாக நடித்திருந்த பவானி ஸ்ரீ, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமாரின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகின. அதுவும் வழிநெடுக காட்டுமல்லி என்ற பாடல், இளையராஜா குரலில் மனதை வருடியது. இந்த பாடல் டிரண்டிங் ஆகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
கடந்த 2023ம் ஆண்டிலேயே ஆறு மாதங்களுக்குள் விடுதலை 2ம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பல மாதங்களாக நீடித்தது. மீண்டும் மீண்டும் காட்சிகளை புதிதாக எழுதி எழுதி இயக்கியதாக வெற்றிமாறன் மீதும் புகார் எழுந்தது. இதனால் விடுதலை படம் வெளியாகி 20 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் திரைக்கு வரவில்லை.
இந்நிலையில், வருகிற டிசம்பர் 20ம் தேதி விடுதலை 2 ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் பேட்ச் ஒர்க் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. இரவு பகல் பாராமல் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகளில் வெற்றிமாறன் தலைமையில் படக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.
பேட்ச் ஒர்க் பணிகளை 19 நாட்கள் வரை வெற்றிமாறன் முடிவு செய்திருந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இயக்குனர் வெற்றிமாறனிடம் கலந்து பேசாமல் அவராகவே டிசம்பர் 20ம் என ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இதனால் வெற்றிமாறன், தயாரிப்பாளர் மீது கடும் கோபத்தில் உள்ளார். மேலும், குறுகிய நாட்களுக்குள் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய நெருக்கடியிலும் தவிக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.





