வெற்றிமாறன் கடைசியாக இயக்கியிருந்த விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் கலவையான விமர்சனத்தை பெற்றது. சொல்லப்போனால் அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்களிலேயே அதிகளவு ரசிகர்களை ஈர்க்காமல் போன திரைப்படமாக அது மாறியது. படத்தில் பிரச்சார நெடி அதிகமாக இருந்ததும், நீளமான காட்சிகளுமே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு முந்தைய பாகமான விடுதலை படம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. அதில் சூரியை முதன்மைப்படுத்தி காட்சிகளை நகர்த்தி இருந்தார் வெற்றிமாறன். அந்த திரைப்படத்தில் விறுவிறுப்பு நிறைந்து இருந்தது. ஆனால் இதன் இரண்டாம் பாகம், அந்த அளவுக்கு கவனம் பெறவில்லை.
இப்படியான சூழலில் வெற்றிமாறனின் அடுத்த திரைப்படம் வாடிவாசலாக தான் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் பணிகளை, விடுதலை படத்திற்கு முன்பாகவே தொடங்கியிருந்தார் வெற்றிமாறன். இது தொடர்பான டெஸ்ட் சூட்டிங்கும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது.
தொடர்ந்து அமெரிக்காவில் இதற்கான விஎஸ் எக்ஸ் பணிகளும் நடைபெற்றன. சி சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்னும் குறுநாவலை மையமாக வைத்தே இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் வெற்றிமாறன் மற்றும் சூர்யா இருவரும் அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால், வாடிவாசல் ஷூட்டிங் நடைபெறுவதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வந்தது.
இருப்பினும் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணுதான் வாடிவாசல் நிச்சயமாக வரும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், வெங்கி அட்லூரி படத்தில் நடிக்க சென்று விட்டார் சூர்யா. தொடர்ந்து வெற்றி மாறனும் சிம்புவை வைத்து வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக தகவல் வெளியானது.
இதன் சூட்டிங் ஜூலை மாதம் மத்தியில் தொடங்கும் என்றும் பேசினார்கள். படத்தை தாணுவே தயாரிப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால் தற்போது வந்திருக்கும் தகவல்படி படத்தின் தயாரிப்பாளர் அவர் இல்லையாம். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவிதான் இதனை எடுக்க இருக்கிறாராம். அதேபோல், இது வட சென்னை கதை இல்லை என்றும், ஒரு நாவலை அடிப்படையாக வைத்துதான் இந்த படத்தை வெற்றிமாறன் எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





