தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. மலையாளத்தில் லோக்கல் டிவி சேனல் ஒன்றில் காம்பியராக பணிபுரிந்த நயன்தாரா, மனாசிகரே என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பிறகு தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஐயா என்ற படத்தில் நயன்தாரா அறிமுகமானார். இந்த படத்தில் சரத்குமார் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து நடிகர் சிம்புவுடன் வல்லவன், நடிகர் ரஜினிகாந்துடன் சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்தார். தொடர்ந்து விஜய், அஜீத்குமார், தனுஷ், ஜீவா என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்த நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நாயகி என்ற அந்தஸ்து கிடைத்தது.
தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த நயன்தாரா ஒரு கட்டத்தில் கதாநாயகியை மையப்படுத்திய அறம், இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற இமேஜ் அவருக்கு கிடைத்தது. இப்போது தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா கடைசியாக நடித்து வெளியான படம் அன்னபூரணி இது அவரது 75 வது படமாகும். இந்த படத்தைத் தொடர்ந்து இந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலும் நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தை டைரக்டர் அட்லி டைரக்ட் செய்திருந்தார். ஆனால் தொடர்ந்து இந்தியில் நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அன்னபூரணி படமும் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. எனினும் தற்போது மண்ணாங்கட்டி என்ற படம் அவரது நடிப்பில் வெளிவர உள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது, அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. 7 ஆண்டுகள் இருவரும் காதலித்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் ஒரு ரிச்சார்ட்டில் அவர்கள் திருமணம் விமரிசையாக நடந்தது. ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண விழா வீடியோ உரிமத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தாளத்திற்கு பல கோடிகளுக்கு விற்று விட்டதாக அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. இந்த திருமண விழாவை டைரக்டர் கௌதம மேனன் டைரக்ட் செய்திருந்தார்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக நயன்தாரா, விக்கி திருமண வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில், கால தாமதம் நீடித்தது. இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமண விழா வீடியோ விரைவில் வெளியாகும் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. நயன்தாரா பியான்ட் த பேரி டேல் என்ற தலைப்பில் அந்த நிகழ்ச்சி வருகிற நவம்பர் 18ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது நயன்தாரா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.





