நடிகர் அஜித்குமார் தனது 62 ஆவது படத்தில் தற்போது நடித்து வருகிறார். விடாமுயற்சி என பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். முன்தினம் பார்த்தேனே எனும் திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், மகிழ் திருமேனிக்கு தோல்வி படமாக அமைந்தது.
இதன் பிறகு அருண் விஜயை வைத்து தடையற தாக்க திரைப்படத்தை எடுத்தார் மகிழ்திருமேனி. ஆக்சன் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. அருண் விஜயின் வெற்றி பயணத்திலும் முக்கியமான திரைப்படமாக இது அமைந்தது. இதன் பிறகு நடிகர் ஆர்யாவை வைத்து மீகாமன் எனும் திரைப்படத்தை அவர் இயக்கினார். விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், அந்த சமயத்தில் இந்த திரைப்படம் பெரிதாக ஓடவில்லை.
பிறகு அருண் விஜயை வைத்து தடம் படத்தை இயக்கினார் மகிழ் திருமேனி. அருண் விஜய் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்த இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவும் க்ரைம் திரில்லர் ஜானரிலேயே இருக்க, ஒரு கொலையை அண்ணன் செய்தாரா இல்லை தம்பி செய்தாரா என்ற கேள்வியை கடைசி வரைக்கும் பதிப்பதைப்புடன் காட்சிப்படுத்தி அசத்தியிருந்தார் மகிழ் திருமேனி.
இதன் பிறகு உதயநிதியை வைத்து கலகத் தலைவன் படத்தை எடுத்த அவர், தற்போது விடாமுயற்சியில் அஜித்துடன் இணைந்து இருக்கிறார். முன்னதாக இந்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனமான லைகாவுடனும் அவருக்கும் இடையே சிறிய பிரச்சனை ஏற்பட்டதால் அவர் ப்ராஜெக்ட்டில் இருந்து விலகினார்.
விடாமுயற்சி என டைட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக தொடங்கப்படாமல் இருந்து தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து படக்குழு இன்று வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது. இருப்பினும் அங்கிருந்து வரும் புகைப்படங்களில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்து விட்டது.
அதன்படி தற்போது பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த ஆரவ், இணையத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அஜித் குமார் அர்ஜுன் ஆகியோர் இருக்கின்றனர். படப்பிடிப்பை முடித்துவிட்டு இவர்கள் ஹோட்டல் ஒன்றில் உணவரும்போது இந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர். படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இதன் சூட்டிங் நடைபெறும் என்றும் தெரிகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிப்பது குறிப்பிடத்தக்கது.





